Times of Puducherry
தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கியுள்ள இயக்குநர்களில் ஒருவர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் உருவான ‘டோரதி” திரைப்படம் கடந்த 25-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
1990-களின் பின்னணியில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ள ‘டோரதி”, சாதி சார்ந்த வன்முறை மற்றும் இரு நண்பர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகும் 10-வது திரைப்படம் என்ற சிறப்பையும் இப்படம் பெற்றுள்ளது.
‘டோரதி’ திரைப்படம் வெளியானது முதலேரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. அதேநேரத்தில் பரவலான விமர்சனங்களும் எழுந்துள்ளது. அதற்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பதிலடி கொடுத்து வருகிறார். இந்த நிலையில், டோரதி படத்தின் கதைக்கரு தன்னுடையது எனக் குறிப்பிட்டுள்ள குறும்பட இயக்குநர் மதுரை போலீசில் புகார் ஒன்றை அளித்தருக்கிறார்.
மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குறும்பட இயக்குநர் முகமது செரிப் அளித்துள்ள புகார் மனுவில், “மதுரையில் செல்போன் கடை நடத்துகிறேன். கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா நேரத்தில் ‘டாட் நங்கை’ என்ற பெயரில் திருநங்கைகள் குறித்த 3 நிமிட குறும்படம் ஒன்றை தயாரித்தேன். இதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டபோது, அதிகமானோர் கவனத்தை ஈர்த்தது. திருநங்கைகள் மத்தியிலும் வரவேற்று பேசப்பட்டது. இக்கதையை திரைப்படமாக தயாரிக்க முயற்சித்த நிலையில் தாமதம் ஏற்பட்டது.
இந்தநிலையில் சமீபத்தில் வெளியான திருநங்கை பற்றிய ‘டோரதி’ என்ற திரைப்படத்தை பார்த்த சிலர் எனக்கு பேசினர். எனது குறும்பட கதை போன்று இருப்பதாக தெரிவித்தனர். நானும் அப்படத்தை பார்த்தபோது. எனது குறும்பட கதைக்கருவை என்னுடைய அனுமதியின்றி திருடி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ‘டோரதி’ திரைப்படத்தை இயக்கி வெளியிட்டு இருப்பது தெரிந்தது. இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் மீது சட் டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என்று அவர் கூறியுள்ளார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.