Times of Puducherry

யு.பி.ஐ-யில் பணம் அனுப்புகிறீர்களா? அப்போது நீங்கள் கண்டிப்பாக இந்த விஷயத்தை நோட் பண்ணனும்!

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
19 Sep 2026 • 3:16 PM
do you use upi to send money then you must know this

இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்தில், பெட்டிக்கடையில் காய்கறி வாங்குவது முதல் வீட்டிற்கான மின்சாரக் கட்டணம் செலுத்துவது வரை அனைத்திற்குமே ‘யுபிஐ’செயலிகளையே நாம் பெருமளவில் நம்பியிருக்கிறோம். இந்தியச் சில்லறைப் பணப்பரிவர்த்தனை கழகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, ஆகஸ்ட் 2026-ல் மட்டும் 24,508 மில்லியனுக்கும் அதிகமான யுபிஐ பரிவர்த்தனைகள் வெற்றிகரமாக நடந்துள்ளன. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ. 29.82 லட்சம் கோடி ஆகும்.

யுபிஐ பயன்பாடு எந்தளவிற்கு அதிகரித்துள்ளதோ, அந்தளவிற்கு அதைச் சார்ந்த ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. ஹேக்கர்கள் நேரடியாக யுபிஐ தொழில்நுட்பத்தை தாக்குவதற்கு பதிலாக, பயனர்களின் அறியாமையை பயன்படுத்தி, அவர்களிடம் இருந்தே யுபிஐ பின் மற்றும் ஓடிபி- களைச் சாதுரியமாக பறிக்கின்றனர். யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தும்போது உங்கள் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் முக்கியமான பாதுகாப்பு விதிகள் இதோ!

யுபிஐ பின் என்பது ‘பணம் அனுப்ப’ மட்டுமே

வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு பணத்தை அனுப்புவதற்கு மட்டுமே 4 அல்லது 6 இலக்க ரகசிய யுபிஐ பின் பயன்படுத்தப்படுகிறது. வங்கி அதிகாரிகள், வாடிக்கையாளர் சேவை மையப் பிரதிநிதிகள், காவல்துறை என யாருமே உங்களிடம் பின் எண்ணைக் கேட்க மாட்டார்கள். எனவே, யுபிஐ பின்னை பிறரிடம் பகிர்வது உங்கள் வங்கிக் கணக்கையே அவர்களிடம் ஒப்படைப்பதற்கு சமம்.

பணம் பெற கியூஆர் கோட் ஸ்கேன் செய்யாதீங்க

மோசடி செய்பவர்கள் அதிகம் பயன்படுத்தும் தந்திரம் இதுதான். உங்கள் கணக்கிற்கு பணம் வரவழைக்க நீங்கள் எந்தவொரு QR Code-ம் ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியமில்லை; யுபிஐ பின்னை உள்ளிடவும் தேவையில்லை. உங்களுக்குப் பணம் அனுப்ப வேண்டும், இந்த கியூஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள் என்று யாராவது கூறினால், அவர் உங்களை ஏமாற்றப் பார்க்கிறார் என்பதை உடனடியாகப் புரிந்து கொள்ளுங்கள்.

‘கலெக்ட் ரிக்வெஸ்ட்’ (Collect Request) கவனமாகப் பாருங்கள்

யாராவது உங்களுக்குப் பணம் அனுப்புகிறார்கள் என்றால், அவர்கள் தங்களின் செயலியில் உங்கள் மொபைல் எண் அல்லது யுபிஐ ஐ.டி-யை பயன்படுத்தி நேரடியாக பணம் அனுப்புவார்கள். மாறாக, உங்கள் மொபைல் திரையில் “Pay” அல்லது “Approve” என்று கோரிக்கை வந்தால், அது உங்கள் கணக்கில் இருந்து பணம் பறிபோவதற்கான கோரிக்கையாகும். அதை ஒருபோதும் அங்கீகரிக்கக் கூடாது.

போலி கேஷ்பேக் – கேஒய்சி லிங்க்குகள்

உங்களுக்கு ரூ. 500 கேஷ்பேக் கிடைத்துள்ளது, உடனடியாக கேஒய்சி அப்டேட் செய்யாவிட்டால் வங்கி கணக்கு முடக்கப்படும் என்று வாட்ஸ்அப் அல்லது எஸ்.எம்.எஸ் மூலம் வரும் லிங்க்குகளை கிளிக் செய்யாதீர்கள். வங்கிகள் அல்லது யுபிஐ செயலிகள் இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான லிங்க்குகளை அனுப்பாது. ஏதேனும் சந்தேகம் இருந்தால், வங்கியின் அதிகாரப்பூர்வச் செயலியைத் திறந்து சரிபார்ப்பதே பாதுகாப்பானது.

யுபிஐ மோசடியில் சிக்கினால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?

1930 எண்ணிற்கு அழைப்பியுங்கள்: ஒருவேளை நீங்கள் ஏமாற்றப்பட்டுப் பணம் பறிபோனால், தாமதிக்காமல் இந்தியாவின் தேசிய சைபர் குற்ற உதவி எண்ணான 1930- வை தொடர்பு கொண்டு புகார் அளிக்கவும்.

தேசிய சைபர் குற்ற போர்ட்டல்: cybercrime.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் உடனடியாகப் புகார் பதிவு செய்யலாம்.

வங்கியைத் தொடர்புகொள்ளுங்கள்: உங்கள் வங்கியின் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொண்டு, சம்பந்தப்பட்ட யுபிஐ கணக்கை தற்காலிகமாக முடக்குமாறு (Block) கோரலாம்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top