Times of Puducherry

தட்டாஞ்சாவடி தொகுதியில் திமுக சார்பில் பிரச்சாரம் தொடக்கம்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
10 Sep 2026 • 12:32 PM

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சேது செல்வம், திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஜெகத்ரட்சகர் எம்.பி மற்றும் திமுக மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் இன்று தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.‌ இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கிய நிலையில், வரும் 16ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் இறுதி நாளாகும். இந்நிலையில் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சேது செல்வம் இன்று தனது பிரச்சாரத்தை தொடங்கினார். புதுப்பேட்டை புத்துலாய் மாரியம்மன் கோவிலில் பூஜை செய்த பின், திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஜெகத்ரட்சகர் மற்றும் மாநில அமைப்பாளர் சிவா ஆகியோர் தலைமையில், வேட்பாளர் சேது செல்வம் தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திமுக கொள்கை பரபரப்புச் செயலாளர் ஜெகத்ரட்சகர் எம்.பி, இது ஒரு பிரகாசமான தொகுதி. இந்தத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் பலமுறை வெற்றி பெற்றிருக்கிறது. இந்தத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. திமுகதான் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பலமான கட்சி. திமுக மிகப்பெரிய ஆலமரம் போன்றது. இது நூறு ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட மாபெரும் இயக்கம். மற்றவர்கள் கூட்டணியில் சேர வந்தால் வரலாம். அதற்காக திமுக மற்றவர்களைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றார்.

முதலமைச்சர் ரங்கசாமி இந்தத் தொகுதியில் ஏழு முறை வெற்றி பெற்று இருக்கிறாரே? என்ற கேள்விக்கு அவரை எதிர்த்து எங்களுடைய வியூகம் என்ன என்பதைத் தேர்தல் நேரத்தில் தெரிவிப்போம் என்றார். புதிதாக மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, நாங்கள் தனித்து நிற்கிறோம். தனித்துப் போட்டியிடுகிறோம். திமுக ஒரு மிகப்பெரிய இயக்கம். தனித்து நின்று இந்தத் தொகுதியில் வெற்றி பெறுவோம். ஒவ்வொரு நாளும் ஒரு கூட்டணிப் பெயரை அறிவிக்கிறார்கள். அதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. தேர்தல் முடிந்த பிறகு கிடைக்கும் வாக்குகளைப் பார்த்துதான் அது குறித்து கருத்து கூற முடியும் என ஜெகத்ரட்சகர் பதில் அளித்தார். புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதியில் மிகப்பெரிய மாற்றத்தை நடத்திக் காட்டுவோம். மக்கள் மாற்றத்திற்குத் தயாராக இருக்கிறார்கள். புதுச்சேரியில் சபாநாயகர் தேர்தல்கூட நடத்த முடியவில்லை. இத்தகைய இக்கட்டான சூழ்நிலை நிலவுகிறது. இந்தத் தொகுதியில் சேதுசெல்வம் வெற்றி பெற்றால், புதுச்சேரி அரசியலில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும். புதுச்சேரியில் நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெறும். கூட்டணி இல்லாமல் திமுக களம் காண்பது புதிதல்ல. 1967-க்கு முன்பு கூட்டணிகள் இல்லாமல் தனித்தனியாகத்தான் தேர்தலில் போட்டியிட்டோம். கூட்டணி இருந்தால் நல்லது. இல்லாவிட்டாலும் பரவாயில்லை. நாங்கள் தனித்து நின்று போட்டியிடுவோம். தட்டாஞ்சாவடி தொகுதியில் பலருடைய பெயர்கள் பரிசீலனையில் இருந்தபோதும், சேது செல்வம் வேட்பாளராக நிறுத்தப்பட்டது தலைவரும் தலைமைக்கழகமும் எடுத்த முடிவு. வேட்பாளர் யார் என்று தலைமை அறிவித்தால், அவருக்காக நாங்கள் முழுமையாகப் பணியாற்றுவோம். திமுக இந்தத் தேர்தலை எவ்வாறு சந்திக்கும் என்பது பின்னர் தெரிவிக்கப்படும். சரியான நேரத்தில் எங்களுடைய வியூகம் அறிவிக்கப்படும். அது மிகப் பிரம்மாண்டமாக இருக்கும். தலைவர் பிரச்சாரத்திற்கு வருவாரா என்பது குறித்து விரைவில் தெரிவிப்போம் என்றும் ஜெகத்ரட்சகர் தெரிவித்தார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top