Times of Puducherry
திண்டுக்கல்லில் அமைச்சர் வன்னியரசுவின் உருவப்படத்தை அவமதித்த சம்பவத்தைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் உருவபொம்மையை எரிக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட விசிகவினரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று பாரதிய இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, அமைச்சர் வன்னியரசுவின் புகைப்படத்தை செருப்பால் அடித்து அவமதித்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக, தாடிக்கொம்பு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, பாரதிய இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மலைக்கோட்டை தர்மாவை போலீசார் கைது செய்தனர்.
அமைச்சர் வன்னியரசுவின் உருவப்படம் அவமதிக்கப்பட்ட சம்பவம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், திண்டுக்கல் நாகல்நகர் ரவுண்டானா பகுதியில் விசிகவினர் திரண்டனர். திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் மைதீன்பாவா தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், அமைச்சர் வன்னியரசுவை அவமதித்த சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
போராட்டத்தின்போது, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் உருவபொம்மையை எரிக்க விசிகவினர் முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாகத் தலையிட்டு உருவபொம்மையை எரிக்கும் முயற்சியைத் தடுத்தனர். இதனால் போராட்டப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. தொடர்ந்து, கிருஷ்ணசாமியின் புகைப்படத்தைக் கிழித்த விசிகவினர், அதைக் காலால் மிதித்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களைக் கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இருப்பினும், போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட விசிகவினரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நாகல்நகர் ரவுண்டானா பகுதியில் போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அரசியல் கட்சியினரிடையே ஏற்பட்ட இந்த மோதல் போக்கு காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. உருவப்படம் அவமதிக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நடைபெற்ற இந்தச் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.