Times of Puducherry
டிஜிட்டல் மோசடியில் ஈடுபட்டு வரும் நபர்கள் தற்போது வாட்ஸ் அப்பில் புகைப்படம் ஒன்றை அனுப்பி அதன் மூலம் சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக சைபர் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிஜிட்டல் உலகம் வளர்ந்த பின்னர் அதற்கு ஏற்ற வகையில் டிஜிட்டல் மூலம் மோசடி செய்யும் பேர்வழிகளும் அதிகரித்து வருகின்றனர். சைபர் கிரைம் குற்றவாளிகளை கண்டுபிடிக்க அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டாலும், இவர்களை முழுமையாக ஒழித்துக்கட்ட முடியவில்லை. இத்தகைய மோசடி பேர்வழிகள் புது புது வழிகளை கண்டுபிடித்து அதன் மூலம் மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப்பில் புகைப்படம் ஒன்றை அனுப்பி அதன் மூலம் குற்றச்செயல்கள் நடைபெற்று வருவதாக சைபர் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்பின் தெரியாத நபர்களிடமிருந்து whatsapp மூலம் வரும் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்வதன் மூலம் ஸ்மார்ட் ஃபோன்களில் மால்வர் சாப்ட்வேர் நிறுவப்படுகிறது. இதன் வழியாக வங்கி கணக்கில் உள்ள பணத்தை முழுமையாக திருடும் குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அப்பாவி பொதுமக்களையும், வயதில் முதிர்ந்தவர்களையும் குறி வைத்து இந்த நுணுக்கமான மோசடி நடைபெறுகிறது. முன்பின் தெரியாத எண்களில் இருந்து எப்படி இருக்கிறீர்கள்? நலமாக இருக்கிறீர்களா? என்று கேள்விகளுடன் உரையாடல் தொடங்குகிறது. அதன் பின்னர் இவரைத் தெரியுமா? என்கிற கேள்வியுடன் ஒரு மங்கலான புகைப்படம் அனுப்பப்படுகிறது.
பலரும் இது வெறும் புகைப்படம் தானே என்கிற ஆர்வத்தில் அதை பதிவிறக்கம் செய்து பார்க்க முயல்கின்றனர். ஆனால் அந்த புகைப்படத்தை கிளிக் செய்த பின்னர் பயனளர்களின் வங்கி கணக்கில் ஒற்றை ரூபாய் கூட மிச்சம் இல்லாமல் திருடப்படும் அபாயம் உள்ளது. எனவே முன்பின் தெரியாதவர்கள் அனுப்பும் செய்தியை தவறுதலாக தொடுதல் கூடாது. வாழ்த்துச் செய்திகள், மீம்கள், விடுமுறை கொண்டாட்டம், விளம்பரம், ரீசார்ஜ் திட்டங்களில் ஆஃபர்கள் போன்ற புகைப்படங்களை கிளிக் செய்யக்கூடாது. அப்படி செய்யும் பட்சத்தில் மோசடி ஆப்கள் நம் மொபைலில் பதிவிறக்கம் ஆகிவிடும்.
இதன் மூலம் நாம் செல்போனில் உள்ள முக்கிய தகவல்கள், புகைப்படங்கள், whatsapp உரையாடல்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், பாஸ்வேர்டுகள் உள்ளிட்டவை சைபர் கிரைம் குற்றவாளிகளுக்கு சென்று விடும். இதன் மூலம் அவர்கள் நம் வங்கி கணக்கில் இருந்த பணத்தை திருடி பரிமாற்றம் செய்து விடுவார்கள். எனவே முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து வரும் லிங்க்குகள், புகைப்படங்க,ள் தகவல்கள் என எதையும் திறக்கவோ கிளிக் செய்யவோ வேண்டாம் என்று சைபர் கிரைம் அறிவுறுத்தி உள்ளது.
மேலும் whatsapp செயலியில் செட்டிங்ஸ் பகுதியில் ஸ்டோரேஜ் அண்ட் டேட்டா (Storage and Data) என்கிற பிரிவில் மீடியா ஆட்டோ டவுன்லோட் (Media Auto Download) என்கிற வசதியை ஆஃப் செய்ய வேண்டும். மேலும் மொபைல் டேட்டா, வைஃபை, ரோமிங் என்ற அனைத்து பிரிவுகளிலும் படங்கள் தானாக பதிவிறக்கம் ஆவதை அணைத்து வைக்க வேண்டும். ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் முதியவர்கள், வீட்டில் உள்ள பெரியவர்கள், எழுத படிக்க தெரியாதவர்கள், தொழில்நுட்ப அறிவு குறைந்தவர்கள் ஆகியவர்களுக்கு இதன் ஆபத்து குறித்து விளக்க வேண்டும். தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வையும் அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.