Times of Puducherry

ஜெம் வீரமணியின் பாலியல் கொடூரம்; அனைவரும் கடும் தண்டனை பெறுவதை உறுதி செய்க: தமிழக அரசுக்கு சி.பி.ஐ வலியுறுத்தல்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
23 Sep 2026 • 6:50 PM
CPI gem veeramani pocso case

ஜெம் வீரமணியின் பாலியல் கொடூரத்திற்கு துணை போனவர்கள், உதவியவர்கள், புகாரை அலட்சியப்படுத்த அழுத்தம் கொடுத்தவர்கள் என அனைவரும் கடும் தண்டனை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி இருக்கிறது.

இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

‘ஜெம்’ கிரனைட்ஸ் முதலாளி வீரமணி ஏழு முதல் 13 வயது வரை உள்ள ஆதரவற்ற சிறுமியர்களை ஏமாற்றி, பாலியல் வன்முறை செய்த குற்றத்திற்காக போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூரக் குற்றச் செயல்களுக்கு அவரிடம் 23 ஆண்டுகள் உதவியாளராக இருந்த, கணேசன், சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் மட்டுமே காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் குற்றச் செயல்களுக்கு உதவியவர்கள், கவனத்துக்கு வந்து நடவடிக்கை எடுக்க தவறியவர்கள் என அனைவரும் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். இக்குற்றம் தொடர்பான ‘வீடியோ’க்கள் அடங்கிய பென் டிரைவ்களை காவல்துறை கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழ்நாடு அரசு இவ்வழக்கை மிகுந்த கவனத்தோடும், எச்சரிக்கையுடனும் கையாண்டு வருகிறது.

இந்த வழக்கில் தொடர்புடைய எந்த குற்றவாளியும் தப்பிவிடாத வகையில் அனைத்து ஆதாரங்களையும் திரட்டி, நீதிமன்றம் மூலம் கடுமையான தண்டனைகளை பெற்றுத்தர வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top