Times of Puducherry
சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்வதைத் தடுக்க போக்குவரத்து துறையும், காவல்துறையும் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், நேற்று (புதன்கிழமை) சென்னை போரூர் பகுதியில் அரசு மாநகரப் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த பேருந்தில் ஏறிய சில அரசுப் பள்ளி மாணவர்கள், உள்ளே இடம் இருந்தும் வேண்டுமென்றே படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளனர்.
ஆத்திரம்
இதனைக் கண்ட பேருந்து நடத்துநர், மாணவர்களின் பாதுகாப்பு கருதி அவர்களைப் படிக்கட்டில் இருந்து உள்ளே ஏறி நின்று பயணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும், படிக்கட்டில் தொங்கினால் பேருந்தை இயக்க முடியாது என்றும் எச்சரித்துள்ளார். நடத்துநரின் இந்த அறிவுரையால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள், பேருந்துக்குள்ளேயே நடத்துநரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தாக்குதல்
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தின் உச்சத்திற்கேறிய மாணவர்கள், நடத்துநரைத் தகாத வார்த்தைகளால் திட்டி, அவர் மீது திடீரென சரமாரி தாக்குதல் நடத்த தொடங்கினர். சக பயணிகள் மற்றும் பேருந்தில் இருந்த பெரியவர்கள் மாணவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றனர். இருப்பினும், பயணிகளின் பேச்சைக் கேட்காமல், தடுத்தவர்களையும் மீறி மாணவர்கள் நடத்துநரைத் தொடர்ந்து கொடூரமாகத் தாக்கினர். இதனால் பேருந்துக்குள் பெரும் கூச்சலும் குழப்பமும் நிலவியது.
விசாரணை
பள்ளி மாணவர்களின் இந்த அராஜகப் போக்கு பேருந்தில் இருந்த பயணிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சென்னை மாநகரக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, நடத்துநரைத் தாக்கிய அரசுப் பள்ளி மாணவர்களைத் தீவிரமாகத் தேடி விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்களின் இத்தகைய வன்முறை கலாச்சாரம் மற்றும் படிக்கட்டு பயணம் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நடவடிக்கை
இந்நிலையில், போரூரில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கும், நடத்துநருக்கும் ஏற்பட்ட கைகலப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சூழலை எதிர்கொள்வது, கையாள்வது குறித்து அப்பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் உளவியல் ஆலோசனை வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை செயலாளர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.