Times of Puducherry
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், கடைகளுக்கு நேரடியாக சென்று விலை விசாரித்து வாங்க வேண்டிய அவசியமின்றி, வீட்டில் இருந்தபடியே செல்போன் மூலம் ஆடைகள் முதல் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வரை அனைத்தையும் ஆர்டர் செய்யும் வசதி வந்துவிட்டது. இது நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்தினாலும், போலி இணையதளங்கள், பண மோசடி மற்றும் தரமற்ற பொருட்கள் போன்ற பல்வேறு அபாயங்களும் இதில் ஒளிந்துள்ளன. ஆன்லைன் ஷாப்பிங்கின் போது ஏமாறாமல் இருக்கவும், பாதுகாப்பாகப் பரிவர்த்தனைகளைச் செய்யவும் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.
நம்பகமான தளங்களைத் தேர்வு செய்தல்
சர்ச் இன்ஜின்ஸில் வரும் விளம்பரங்களை மட்டும் நம்பாமல், அதிகாரப்பூர்வ செயலிகள் அல்லது இணையதளங்களைப் பயன்படுத்த வேண்டும்.
இணையதளத்தின் முகவரி (URL), நிறுவனத்தின் விவரங்கள், வாடிக்கையாளர் சேவை மைய எண், Terms & Conditions மற்றும் ரிட்டர்ன், ரீஃபண்ட் கொள்கைகள் உள்ளனவா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.
‘HTTPS’ பாதுகாப்பு இருப்பது மட்டுமே ஒரு தளம் முற்றிலும் பாதுகாப்பானது என்பதற்கு முழுமையான சான்றாகாது.
ஆசை காட்டும் போலித் தள்ளுபடிகள்
இன்னும் 5 நிமிடங்களில் சலுகை முடிந்துவிடும், இப்போது வாங்கினால் இலவசப் பரிசு போன்ற அவசரப்படுத்தும் விளம்பரங்களை கண்டு ஏமாறக் கூடாது. ஒரு பொருளின் விலை குறைவாக இருக்கும்போது, அதன் உண்மையான எம்.ஆர்.பி, பிற தளங்களின் விலை, டெலிவரி கட்டணம், பிளாட்ஃபார்ம் கட்டணம் (Platform fee) மற்றும் வாரண்டி ஆகியவற்றையும் ஒப்பிட்டுப் பார்த்தே முடிவு செய்ய வேண்டும்.
ஆன்லைன் பணப்பரிவர்த்தனை எச்சரிக்கைகள்
OTP, ATM PIN, UPI PIN, CVV போன்ற ரகசிய எண்களை வங்கி அல்லது வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதி என்று கூறும் யாரிடமும் பகிரக் கூடாது. பணம் பெறுவதற்கு UPI PIN தேவையில்லை. ரீஃபண்ட் தருகிறோம் QR கோடை ஸ்கேன் செய்யுங்கள் என்றோ, பின் எண்ணை உள்ளிடுங்கள் என்றோ கூறினால் அது மோசடி என்பதை உணர வேண்டும்.
சந்தேகத்திற்குரிய லிங்குகள்
“ஆர்டர் ரத்தாகிவிட்டது”, “முகவரியை அப்டேட் செய்யுங்கள்” எனக் கூறி வரும் குறுஞ்செய்தி அல்லது அழைப்புகளில் உள்ள லிங்க்களை க்ளிக் செய்யாமல், நேரடியாக செயலியைத் திறந்து பார்க்க வேண்டும்.
ரிட்டர்ன் பாலிசி மற்றும் விமர்சனங்கள்
பொருளை ஆர்டர் செய்வதற்கு முன்பே ‘Return’ வசதி உள்ளதா அல்லது ‘Replacement’ மட்டும்தானா? எத்தனை நாட்களுக்குள் திருப்பிக் கொடுக்க முடியும்? போன்ற விதிகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
போலி விமர்சனங்கள் பல இருக்கலாம். எனவே, எதிர்மறையான விமர்சனங்களில் வாடிக்கையாளர்கள் என்ன குறை சொல்லியிருக்கிறார்கள் என்பதைப் படிப்பது நல்லது.
டெலிவரியின் போது செய்ய வேண்டியவை
விலையுயர்ந்த பொருட்களை வாங்கும்போது பார்சலை பிரிப்பதை வீடியோவாகப் பதிவு செய்து வைப்பது, பின்னாளில் தவறான பொருள் வந்தாலோ அல்லது சேதமடைந்திருந்தாலோ ஆதாரமாக உதவும்.
பார்சல் கிழிந்திருந்தாலோ அல்லது திறக்கப்பட்டது போல இருந்தாலோ உடனடியாக அதை டெலிவரி எடுக்கும்போதே பதிவு செய்ய வேண்டும்.
பிரச்சனைகள் ஏற்பட்டால் நுகர்வோர் குறைதீர் வழிகள்
ஆன்லைனில் வாங்கிய பொருள் வரவில்லை, போலி பொருள் வந்தது அல்லது ரீஃபண்ட் கிடைக்கவில்லை என்றால் கீழ்க்கண்ட படிநிலைகளைப் பின்பற்றலாம்.
Order ID, Payment Receipt, Invoice, உரையாடல்களின் ஸ்கிரீன் ஷாட் போன்றவற்றைச் சேமித்து வைக்க வேண்டும்.
முதலில் சம்பந்தப்பட்ட இ-காமர்ஸ் தளத்தின் Customer Support-ல் புகார் அளிக்க வேண்டும்.
தீர்வு கிடைக்காவிட்டால், இந்திய அரசின் தேசிய நுகர்வோர் உதவி மையத்தின் 1915 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது 8800001915 என்ற வாட்ஸ் அப் எண் மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம்.
‘Consumer Protection Act, 2019’ மற்றும் ‘Consumer Protection (E-Commerce) Rules, 2020’ விதிகளின் கீழ் நுகர்வோருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் மூலம் சட்டப்பூர்வ தீர்வும் பெற முடியும்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.