Times of Puducherry

சருமத்தை சீரழிக்கும் நச்சு உலோகங்கள்; பாகிஸ்தான் தயாரிப்பு பியூட்டி க்ரீம்களுக்கு மத்திய அரசு தடை

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
16 Sep 2026 • 5:49 PM
cdsco alert against pakistani whitening creams over excessive heavy metals

இந்தியாவில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வரும் பாகிஸ்தான் தயாரிப்பான இரு பிரபல அழகுப் பூச்சு (Whitening/Fairness Creams) க்ரீம்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் நச்சுத் தன்மை கொண்ட கன உலோகங்கள் (Heavy Metals) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்தப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (CDSCO) மக்களுக்கு அவசரப் பொது சுகாதார எச்சரிக்கை விடுத்துள்ளது.

தடை விதிக்கப்பட்ட இரு தயாரிப்புகள்:

மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள பொது எச்சரிக்கை அறிவிப்பில் பின்வரும் இரு பாகிஸ்தானிய தயாரிப்புகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன:

கோரி பியூட்டி க்ரீம் (Goree Beauty Cream – Made in Pakistan)

சாந்தனி வொய்ட்னிங் க்ரீம் (Chandni Whitening Cream – Made in Pakistan)

ஆய்வகச் சோதனை மற்றும் பகுப்பாய்விற்குப் பிறகு, இந்த இரு அழகுச் சாதனப் பொருட்களும் இந்தியாவில் இறக்குமதி செய்ய முறையான பதிவுச் சான்றிதழையோ (Registration Certificate) அல்லது அனுமதியையோ பெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆபத்தான நச்சு விளைவுகள்:

இந்திய தர நிர்ணய அமைப்பின் (BIS) விதிகளின்படி அழகுச் சாதனப் பொருட்கள் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். ஆனால், இந்த க்ரீம்களில் நிர்ணயிக்கப்பட்ட வரம்பைத் தாண்டி அதிகப்படியான கன உலோகங்கள் கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை சருமத்தின் வழியாக உடலுக்குள் ஊடுருவி விஷத்தன்மை (Toxic Effects) மற்றும் தீவிர ஆரோக்கியக் கேடுகளை விளைவிக்கும் என மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.

நுகர்வோருக்கு மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்கள்:

வாங்கவோ பயன்படுத்தவோ வேண்டாம்: பொதுமக்கள் இந்த இரு க்ரீம்களையோ அல்லது இதே பெயரில் விற்கப்படும் போலிப் பொருட்களையோ வாங்க வேண்டாம் என்றும், ஏற்கனவே வாங்கி வைத்திருந்தால் உடனடியாகப் பயன்படுத்துவதை நிறுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முறையான விபரங்களைச் சரிபார்க்கவும்: அழகுப் பொருட்களை வாங்கும் போது தயாரிப்பு உரிமம் எண் (Manufacturing License No), உற்பத்தியாளர் முகவரி, பேட்ச் எண், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கான பதிவு எண் ஆகியவற்றைச் சரிபார்த்து வாங்க வேண்டும்.

விளம்பரம் மற்றும் விற்பனைக்குத் தடை: வணிக நிறுவனங்களோ அல்லது தனிநபர்களோ இந்தத் தயாரிப்புகளை விற்கவோ, விநியோகிக்கவோ அல்லது விளம்பரம் செய்யவோ கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மாநில மற்றும் யூனியன் பிரதேச மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்த ஆபத்தான அழகுச் சாதனப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை உடனடியாகத் தடுக்க வேண்டும் என மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top