Times of Puducherry
பிரிக்ஸ் அமைப்பிற்குள் 'குளோபல் சவுத்' நாடுகளின் குரல்கள் கேட்கப்படுவதாலும், அவர்களின் அனுபவங்கள் மதிக்கப்படுவதாலும் அந்த அமைப்பின் மீதான அவர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் இறுதி நாளில், நட்பு நாடுகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட தலைவர்களுடனான சந்திப்பில் உரையாற்றிய பிரதமர் மோடி, உலகெங்கிலும் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார். இது சாதாரண மக்களின் வாழ்க்கையில் பெரும் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், இதனால் பிரிக்ஸ் அமைப்பிற்குள் மீள்தன்மையை அதிகரிப்பதில் இந்தியா சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி பல புதிய திட்டங்களை அறிவித்தார்
தொற்று நோய்களைத் தடுப்பதற்கும் எதிர்கொள்வதற்கும் பிரிக்ஸ் ஒருங்கிணைந்த முன் எச்சரிக்கை அமைப்பு
பிரிக்ஸ் விநியோக சங்கிலி கூட்டுறவு கட்டமைப்பு
பிரிக்ஸ் இன்குபேட்டர் நெட்வொர்க், ஸ்டார்ட் அப் கண்டுபிடிப்பு நிதி மற்றும் எம்.எஸ்.எம்.இ கூட்டுறவு போர்ட்டல்
ஸ்மார்ட் கிரிட்களுக்கான டிஜிட்டல் சிறப்பாய்வு மையம் (Digital Centre of Excellence for Smart Grids), நகர்ப்புற நகர்வு மையம்
மீளுருவாக்கம் செய்யும் விவசாயத்திற்கான சிறப்பாய்வு மையங்கள் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டார்.
சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆகியோர் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர் மோடி, "எனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து கூறுகிறேன், பிரிக்ஸ் அமைப்பின் மீதான குளோபல் சவுத் நாடுகளின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. ஏனெனில் இங்கு அவர்களின் குரல்கள் கேட்கப்படுகின்றன; அனுபவங்கள் மதிக்கப்படுகின்றன. தீர்வுகள் அவர்களுக்காக மட்டுமல்லாமல், அவர்களுடனே இணைந்து உருவாக்கப்படுகின்றன" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தொற்றுநோய்கள், காலநிலை பேரழிவுகள் மற்றும் விநியோக சங்கிலி சீர்குலைவுகள் போன்றவை, இன்றைய சூழலில் எந்தவொரு நெருக்கடியும் ஒரே பிராந்தியத்துடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை என்பதை நிரூபித்துள்ளன. அதனால்தான் சவால்களை சரியான நேரத்தில் கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுப்பதில் கவனம் செலுத்துகிறோம். பிரிக்ஸ் அமைப்பின் பலமே அதன் பன்முகத்தன்மையிலும் ஒத்துழைப்பிலும் தான் உள்ளது" எனக் குறிப்பிட்டார்.
இந்தியாவின் 4 முக்கிய முன்னுரிமைகள்
பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியாவின் முன்னுரிமைகளை விவரித்த பிரதமர் மோடி, "இந்தியாவின் தலைமையின் கீழ் மீள்தன்மை, கண்டுபிடிப்பு, ஒத்துழைப்பு மற்றும் நிலையான தன்மை ஆகிய 4 தூண்களில் கவனம் செலுத்தியுள்ளோம்" என்றார்.
மேலும், இயற்கைக்கும் மனித வளர்ச்சிக்கும் இடையிலான சமநிலையை வலியுறுத்திய அவர், "இந்திய நாகரிகத்தில் இயற்கை தாயாக வணங்கப்படுகிறது. வளர்ச்சியும் சுற்றுச்சூழலும் ஒன்றுக்கொன்று மாற்றாக இல்லாமல், நிரப்பிகளாக இருக்க வேண்டும் என்பதே நமது நம்பிக்கை" என்று கூறினார்.
சீன அதிபர் ஷி ஜின்பிங் கருத்து
சீன அதிபர் ஷி ஜின்பிங் பேசுகையில், "உலகம் ஒரு நூற்றாண்டில் இல்லாத மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. இதில் குளோபல் சவுத் நாடுகள் கூட்டாக எழுச்சி பெற்று வருகின்றன. உலகைச் சீராக வைத்திருக்க, பிரிக்ஸ் நாடுகள் குளோபல் சவுத் நாடுகளுடன் இணைந்து பன்னாட்டு விவகாரங்களில் அமைதியை ஏற்படுத்தும் நேர்மறையான பங்கினை வகிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, எத்தியோப்பிய பிரதமர் அபிய் அகமது, பிரேசில் மற்றும் சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.