Times of Puducherry
சோலார் பேனல்களை வாங்குவதற்கு முன்னர், கருப்பு மற்றும் நீல நிற பேனல்களுக்கு இடையே உள்ள முக்கிய வேறுபாடுகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
கருப்பு vs ப்ளூ.! எந்த சோலார் பேனல் சிறந்தது?
அதிகரித்து வரும் மின் கட்டண உயர்வு காரணமாக பலரும் சூரிய ஒளி மின்சக்தியை நோக்கி நகர்ந்து வருகின்றனர். மின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் சூரிய மின் சக்தியை பயன்படுத்த அறிவுறுத்தி வருகின்றன. மேலும் சூரிய ஒளி தகடுகளை (சோலார் பேனல்களை) வாங்குவதற்கு மானியங்களும் வழங்கப்படுகிறது. சந்தைகளில் சோலார் பேனல்கள் கருப்பு மற்றும் நீல நிறங்களில் கிடைக்கிறது. இது இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன? எதை பயன்படுத்துவது சிறந்தது? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.நீல நிற சோலார் பேனல்கள்
நீல நிற சோலார் பேனல்கள் பல சிலிக்கான் படிகங்களை உருக்கி ஒன்றாக சேர்த்து செய்யப்படுகின்றன. இதன் காரணமாகவே அவை நீல நிறத்தில் காட்சி தருகின்றன. இதை பாலி கிரிஸ்டல்லைன் என அழைக்கப்படுகிறது. இது மிதமான செயல் திறன் கொண்டிருக்கும் (15% முதல் 18% வரை). இந்த பேனல்கள் மின்சாரம் தயாரிக்க அதிக இடம் தேவைப்படும். அதிக வெப்ப காலகட்டத்தில் இதன் செயல்திறன் சற்று குறையக்கூடும். உற்பத்தி முறை எளிது என்பதால் இதன் விலை மிகவும் குறைவாகும். இதன் ஆயுட்காலம் அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை.கருப்பு நிற சோலார் பேனல்கள்
கருப்பு நிற சோலார் பேனல்கள் ஒரே படிக சிலிக்கான்களால் ஆனவை. எனவே இவை மோனோகிரிஸ்டல்லைன் என அழைக்கப்படுகிறது. இதன் செயல்திறன் மிகவும் அதிகமாகும். (19% முதல் 23% வரை). நீல நிற பேனல்களை ஒப்பிடும் பொழுது குறைந்த இடத்திலேயே அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யும். அதிக வெப்பம் இருக்கும் நிலையிலும் அல்லது மேகமூட்டமான காலத்திலும் சிறப்பாக செயல்படும். உற்பத்தி முறை கடினம் என்பதால் இதன் விலை அதிகம். வீட்டின் கூரைக்கு அழகிய மற்றும் நவீன தோற்றத்தைத் தரும். நீல நிற பேனல்களை ஒப்பிடும்பொழுது இதன் ஆயுட்காலம் 25 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை ஆகும்.
சோலார் பேனல்களை தேர்ந்தெடுப்பதற்கு கவனிக்க வேண்டியவைசோலார் பேனல்களை தேர்ந்தெடுப்பதற்கு நம் வீட்டின் அமைப்பையும் பார்க்க வேண்டியது அவசியம். வீட்டின் கூரையில் இடம் குறைவாக இருந்தால் கருப்பு பேனலை தேர்ந்தெடுக்கலாம். அதிக மின்சார உற்பத்தி, நீண்டகால பலன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் மற்றும் பிரீமியம் தோற்றத்தை எதிர்பார்ப்பவர்களாக இருந்தால் கருப்பு நிற பேனலை தேர்வு செய்யலாம். குறைந்த பட்ஜெட் மட்டுமே உள்ளது அதே சமயம் பெரிய கூரை இடம் இருப்பவர்கள் நீல நிற பேனல்களை தேர்வு செய்யலாம். உங்களின் பட்ஜெட், வீட்டின் கூரை பரப்பளவை பொறுத்து பொருத்தமான பேனலை தேர்ந்தெடுக்கலாம்.
இறுதியாக,சுருக்கமாக சொன்னால் குறைந்த பட்ஜெட்டில் அதிக இட வசதி இருப்பவர்கள் நீல நிற பேனலையும், சிறிய இடத்தில் அதிக சக்தி தேவைப்படுபவர்கள் கருப்பு நிற பேனல்களையும் பொருத்தலாம். பேனல் வாங்குவதற்கு முன்னர் நிறத்தை மட்டும் பார்க்காமல் கூரையின் இடம், தேவைப்படும் மின்சாரத்தின் அளவு, பட்ஜெட், தகட்டின் தொழில்நுட்பம், கொள்ளளவு, நீண்ட கால செயல் திறன் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.