Times of Puducherry
புதுச்சேரி பேனர் தடை சட்டம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து உப்பளம் தொகுதியில் தனது பிறந்த நாளுக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களை உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தற்காலிக சபாநாயகருமான அன்பழகன் தானாக முன்வந்து தனக்காக வைக்கப்பட்ட பேனரை அப்புறப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தற்காலிக சபாநாயகர் அன்பழகன்:
புதுச்சேரி மாநிலத்தில் திறந்தவெளி விளம்பரங்கள் தடை சட்டம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டிய காவல்துறை, உள்ளாட்சித் துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை சேர்ந்த அதிகாரிகள் சட்டத்தை காலில் போட்டு மிதித்து எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வந்தனர். புதுச்சேரியின் பேனர் கலாச்சாரம் சம்பந்தமாக உயர் நீதிமன்றம் பலமுறை தனது அதிருப்தியை வெளிக்காட்டிய நிலையிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதியான நடவடிக்கையை இதுவரை எடுக்கவில்லை.
தற்பொழுது பருவகால மழை துவங்க உள்ள இவ்வேளையில் ஆங்காங்கே வைக்கப்படும் பேனர்களால் சரிந்து விழுந்து மக்களுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உள்ளது. இதை மனதில் கொண்டு நம்முடைய மாவட்ட ஆட்சியர் அவர்கள் திடீரென பேனர் தடை சட்டம் அமல் உள்ளது என நினைவுபடுத்தி உள்ளார். அதேபோன்று அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை பேனர் வைப்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஒரு சுற்றறிக்கையும் வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தை பொருத்தமட்டில் பேனர் தடை சட்டம் அமலில் உள்ள சூழ்நிலையில் இது போன்ற அறிவிப்புகள் அவசியம் இல்லாத ஒன்றாகும். அதுவும் அடுத்த அறிவிப்பு வரும் வரை யாரும் பேனர் வைக்க கூடாது என்றால் அப்போது அடுத்த அறிவிப்பில் நீங்கள் பேனர் வைத்துக் கொள்ளலாம் என ஒரு அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிடுமா? என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்படுகின்றது. எது எப்படியோ அமலில் உள்ள சட்டத்தை அமல்படுத்த வேண்டியது ஒவ்வொரு துறையின் கடமையாகும். அதேபோன்று சட்டத்தை மதித்து நடக்க வேண்டியது சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினுடைய பொறுப்பாகும்.
அந்த அடிப்படையில் எதிர்வரும் பத்தாம் தேதி எனது பிறந்த தினத்தை முன்னிட்டு நகரப் பகுதியில் பலர் விளம்பரப் பேனர்கள் எனக்கு வைத்துள்ளனர். இது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகும். எனவே மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பை அமல்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் எனது பிறந்தநாளுக்கு வைக்கப்பட்ட பேனரை நானே இன்றைய தினம் அகற்றி உள்ளேன். அன்பு கொண்டவர்கள் என்னுடைய சக நண்பர்கள் என்னுடைய கழகத்தினுடைய பொறுப்பாளர்கள் கழகத் தொண்டர்கள் யாரும் எனது பிறந்தநாளை முன்னிட்டு கட்அவுட் பேனர்கள் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்ற விதத்தில் யாரும் வைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.