Times of Puducherry
அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கி விடுமுறை என்று நிதி அமைச்சகம் அறிவித்ததைப் போன்று சுற்றறிக்கை வெளியான நிலையில், அது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை முறையை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் வங்கிகளின் ஊழியர்கள் மூன்று நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் உடன்பாடு எட்டப்பட்டதால் வங்கி ஊழியர்கள் அறிவித்திருந்த மூன்று நாள் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே வங்கி ஊழியர்களுக்கு அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அறிவித்து நிதி அமைச்சகம் உத்தரவிட்டிருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. மேலும் அரசு வெளியிட்டுள்ள கெஸட் உத்தரவு போலவே புகைப்படங்கள் பரப்பப்பட்டதால் இது உண்மை என பலரும் நம்பி இருந்தனர். இதுகுறித்து விளக்கமளித்துள்ள மத்திய அரசு, “இது வதந்தி என்றும், அந்த புகைப்படத்தை நம்ப வேண்டாம்” என்றும் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உண்மை சரி பார்ப்பு பிரிவு தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, “சமூக ஊடகங்களில் பரவி வரும் நிதி அமைச்சகத்தால் வெளியிடப்பட்டதாக கூறப்படும் ஓர் அறிவிப்பு sbi உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் ஒவ்வொரு சனிக்கிழமையும் பொது விடுமுறை என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாக கூறுகிறது. ஆனால் அவ்வாறு பரப்பப்படும் இந்த ஆவணம் போலியானது. பொதுத்துறை வங்கிகளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கும் வகையில் இந்திய நிதி அமைச்சகம் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை” எனக் கூறியுள்ளது.
மேலும் மத்திய அரசு தொடர்பான சந்தேகத்துக்குரிய தகவல்களை PIB Fact Check-ன் கவனத்திற்கு கொண்டு வருமாறு பொதுமக்களிடன் கேட்டுக் கொண்டுள்ளது. +91 8799711259 என்கிற வாட்ஸ்அப் எண் மூலமாகவோ அல்லது உஎன்கிற factcheck@pib.gov.in ஈமெயில் மூலமாகவும் புகார் அளிக்கலாம் என PIB Fact Check நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.