Times of Puducherry

சீனாவை லாக் செய்யும் இந்தியா! மணிக்கு 350 கி.மீ வேகம்; ’பி35' புல்லட் ரயில் எப்போது வரும் தெரியுமா?

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
20 Sep 2026 • 10:21 PM
b35 bullet train at 350 kmph do you know when it will hit the tracks

இந்திய ரயில்வே துறையில் மிகப்பெரிய மைல்கல்லாக, மணிக்கு 350 கி.மீ வேகத்தில் இயங்கக்கூடிய ‘பி35’ (B35) என்ற உள்நாட்டு அதிவேக புல்லட் ரயிலை 2030-க்குள் தயாரிக்க இந்தியா தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஜப்பானின் அதிநவீன ‘இ10’ (E10) தொடர் ரயில்களுக்கு இணையான தொழில்நுட்பத்துடன் இந்த ரயில் உருவாக்கப்படவுள்ளது. மும்பை – அகமதாபாத் அதிவேக ரயில் திட்டத்தின் (MAHSR) மாற்றியமைக்கப்பட்ட திட்டச் செலவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தபோது இந்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளிவந்தன.

திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்

பி35 ரயில்கள் உற்பத்தி: மணிக்கு 350 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய ‘பி35’ ரயில்களை தயாரிப்பதற்கான ஆரம்பகட்டப் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன.

ஜப்பானிய இ10 தொடர்: ஜப்பான் தனது பழைய இ5 (E5) மாடல் ரயில்களின் உற்பத்தியை நிறுத்திவிட்டு, புதிய ‘இ10’ ரயில்களை 2030 முதல் உற்பத்தி செய்து 2034-க்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

பாரத் ரயில் கட்டுப்பாட்டு அமைப்பு (BTCS): சீனாவின் ‘சி.டி.சி.எஸ்’ (CTCS) சிக்னலிங் முறைக்கு சவாலாக, இந்தியா பி.டி.சி.எஸ் ‘BTCS’ என்ற சொந்த சிக்னல் தொழில்நுட்பத்தை உருவாக்குகிறது. இது ரயிலின் வேகம் மற்றும் தூரத்தை துல்லியமாக கண்காணித்து பாதுகாப்பை அதிகரிக்கும்.

முழு திட்டத்தின் காலக்கெடு

சுமார் 508 கி.மீ தொலைவுகொண்ட மும்பை – அகமதாபாத் அதிவேக ரயில் பாதை திட்டத்தின் அனைத்துப் பணிகளும் டிசம்பர் 2030-க்குள் முழுமையாக நிறைவடையும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இயங்கும் ‘பி28’ ரயில்கள்

முழுமையான ஜப்பானிய தொழில்நுட்ப ரயில்கள் வருவதற்கு முன்பாக, இந்த அதிவேகப் பாதையில் ‘பி28’ (B28) ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

வேகம்: இதன் வடிவமைப்பு வேகம் மணிக்கு 280 கி.மீ ஆகவும், இயங்கு வேகம் மணிக்கு 249 கி.மீ ஆகவும் இருக்கும்.

உற்பத்தி ஒப்பந்தம்: பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம் (BEML) 32, பி28 ரயில்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.

சோதனை ஓட்டம்: இதற்கான 2 முன்மாதிரி ரயில்கள் 2027-ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் சோதனை ஓட்டத்திற்குத் தயாராகிவிடும்.

கூடுதல் ஆர்டர்: மேலும் 15, பி28 ரயில்களைத் தயாரிப்பதற்காக பி.இ.எம்.எல் நிறுவனத்திற்கு ரூ. 5,400 கோடி மதிப்பில் புதிய ஒப்பந்தமும் வழங்கப்பட்டுள்ளது.

திட்டச் செலவு உயர காரணங்கள்

ஆரம்பத்தில் ரூ. 1.1 லட்சம் கோடியாக கணக்கிடப்பட்ட இத்திட்டத்தின் செலவு தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது. அதாவது ஒரு கிலோமீட்டருக்கு சுமார் ரூ. 399 கோடி அதிகரித்து உள்ளது.

நிலம் கையகப்படுத்துதல்: நிலம் வாங்குவதற்கான செலவு 3 மடங்குக்கும் மேலாக உயர்ந்து ரூ. 19,700 கோடியை எட்டியுள்ளது.

உள்கட்டமைப்பு: பாலங்கள், பாதைகள் மற்றும் இதர கட்டுமானச் செலவுகள் 50% உயர்ந்து ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.

தொழில்நுட்பச் செலவு: 2015-ஆம் ஆண்டின் மதிப்பீட்டோடு ஒப்பிடுகையில், ரயில்கள் மற்றும் சிக்னலிங் அமைப்புகளுக்கான செலவு 100% வரை உயர்ந்துள்ளது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top