Times of Puducherry
அன்னபூர்ணா இயற்கை விவசாய பண்ணையின் 100 ஏக்க நிலத்தை சென்னை ஐஐடிக்கு 33 ஆண்டுகள் குறைந்த தொகையில் குத்து கைவிட்டது கண்டிக்கத்தக்கது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:
சர்வதேச நகரமா? மதவாத வேட்டைக்காடா? ஆரோவில்லின் சுதந்திரத்தில் அதிகாரம் செலுத்துவது யார்? உலக அமைதிக்கும் மனித ஒருமைப்பாட்டிற்குமான சர்வதேசப் பெருவெளி ஆரோவில். அது எந்தவொரு மதவாதக் கும்பலின் ஆதிக்கச் சொத்தும் அல்ல, அரசியல் வேட்டைக்காடும் அல்ல. தற்போது, நிலப் பரிமாற்ற ஊழல்கள், இயற்கை வளச் சுரண்டல்கள் என அரவிந்தர் அன்னையின் கனவைச் சீரழிக்கும் நிர்வாகத் துரோகங்கள் எல்லை மீறிவிட்டன. தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்பட்ட ‘அன்னபூர்ணா’ இயற்கை விவசாயப் பண்ணையின் 100 ஏக்கர் நிலத்தைச் சென்னை ஐஐடிக்கு 33 ஆண்டுகள் குறைந்த தொகையிலான குத்தகைக்குத் தாரைவார்த்த நிர்வாகத்தின் அதிகாரத் திமிரையும், ஆரோவில்லின் நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவச் சக்திகள் தங்களின் மதவாதக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் துடிக்கும் அப்பட்டமான அத்துமீறல்களையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
உலகளாவிய மனிதநேயக் களத்தை ஒரு மதத்தின் குறுங்குழுவாதச் சிறையாக்கத் துடிக்கும் இத்தகைய சூழ்ச்சி முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும். பன்னாட்டு மனிதர்களின் அமைதிப் பூங்காவை ஆக்கிரமிப்பாளர்களுக்கும் கார்ப்பரேட் ஏவலாளர்களுக்கும் விற்றுத் தீர்க்க எவருக்கும் உரிமையில்லை.
ஒன்றிய, மாநில அரசுகளே! நில முறைகேடுகள், பண்ணைத் தாரைவார்ப்பு, இந்துத்துவ அதிகாரத் திணிப்பு என அனைத்தின் மீதும் தயவுதாட்சண்யமற்ற சுயாதீன விசாரணையை உடனடியாக நடத்தி உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றும், ஆரோவில்லின் நிலத்தையும் அதன் மாண்பையும் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.