Times of Puducherry

மாவட்ட மிருகவதைத் தடுப்பு சங்கத்தின் முதல் மேலாண்மைக்குழு ஆலோசனைக் கூட்டம்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
25 Sep 2026 • 12:16 PM
animal protection-collector

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அறையில், புதுச்சேரி மாவட்ட மிருகவதைத் தடுப்பு சங்கத்தின் முதல் மேலாண்மைக்குழு கூட்டம், புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும், இச்சங்கத்தின் தலைவருமான குலோத்துங்கன், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதுச்சேரி காவல்துறை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் (சட்டம் மற்றும் ஒழுங்கு), கூடுதல் ஆட்சியர் திரு சுதாகர், புதுச்சேரி நகராட்சி ஆணையர், செய்தி மற்றும் விளம்பரத் துறையின் உதவி இயக்குனர் முனைவர் குலசேகரன், இச்சங்கத்தின் செயலர், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் டாக்டர் கோபிநாத், கால்நடை மருத்துவர்கள் டாக்டர் ராஜு உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், புதுச்சேரி மாவட்ட மிருகவதைத் தடுப்பு சங்கத்தின் செயல்பாடுகள், நோக்கங்கள் மற்றும் எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, கால்நடைகளின் நலன் பாதுகாப்பு, மிருகவதைத் தடுப்பு நடவடிக்கைகள், விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளை குறைக்கும் விதமான செயல்திட்டங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஒருங்கிணைந்த முறையில் செயல்படுதல் குறித்து கருத்து பரிமாற்றம் நடைபெற்றது. மேலும், கால்நடைகள் வதைப்பு தொடர்பான செயல்பாடுகளை புதுச்சேரி நகராட்சி மூலம் ஒழுங்குபடுத்துதல், உரிமம் மற்றும் அனுமதி தொடர்பான செயல்முறைகளை சீர்படுத்துதல், புதுச்சேரி மாவட்ட மிருகவதைத் தடுப்பு சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் மற்றும் ஆயுள் உறுப்பினர்களை சேர்த்தல் தொடர்பான அறிவிப்புகளை சமூக வலைதளங்கள் மூலம் வெளியிடுதல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மாணவர்கள் மத்தியில் விலங்கு நலன் மற்றும் மிருகவதைத் தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது அவசியம் எனக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அதேபோல், விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உலக நாய்க்கடிப்புநோய் தினம், உலக சூனோசிஸ் தினம் மற்றும் விலங்கு நல வாரம் போன்ற தினங்களை முன்னிட்டு விழிப்புணர்வு இயக்கங்கள் நடத்துதல் குறித்தும் முடிவு செய்யப்பட்டது. இதனுடன், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மேற்கொள்ளப்படும் Animal Birth Control (ABC) திட்டங்களில் சங்கத்தின் பங்குபற்றுதல், சம்பந்தப்பட்ட கண்காணிப்பு குழுக்களில் சங்க உறுப்பினர்களை இணைத்தல், விலங்கு நலச் செயல்பாடுகளை விரிவுபடுத்துதல் போன்ற அம்சங்களும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top