Times of Puducherry

சட்டம் - ஒழுங்கு குறித்த தகவல்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற தடை விதிப்பதா - அன்புமணி இராமதாஸ் 

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
27 Sep 2026 • 4:57 PM
anbumani ramadoss

தமிழ்நாட்டில் பொதுத் ( சட்டம் -ஒழுங்கு) துறையை நுண்ணறிவு மற்றும் பாதுகாப்பு அமைப்பாக வகைப்படுத்தி, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் 24 (4) பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழக ஆளுனர் ஆணை பிறப்புத்திருப்பதாகவும், அதன்படி இனி சட்டம் – ஒழுங்கு குறித்த தரவுகள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஒரு மாநிலத்தின் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் சட்டம் – ஒழுங்கு மிகவும் முக்கியமானது என்ற வகையில், அது குறித்த தகவல்களை பெறும் அடிப்படை உரிமையை மக்களிடமிருந்து தமிழக அரசு பறித்திருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையின்படி, சட்டம் – ஒழுங்கின் கூறுகளாகக் கருதப்படும் சாதி, மத மோதல்கள், தடுப்புக்காவல் சட்டத்தின்படியான கைது நடவடிக்கைகள், சட்டம் – ஒழுங்கு குறித்த விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகள், கைதிகளின் மரணம், காவல்துறை விசாரணை அறிக்கைகள் ஆகியவை இனி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி வழங்கப்படாது. மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான கேள்விகளுக்கு அளிக்கப்படும் பதில்கள், மாணவர், விவசாயி மற்றும் அரசியல் கட்சியினர் உள்ளிட்டோரின் போராட்டம் குறித்த தரவுகளைப் பெறவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் அபத்தமானது ஆகும்.

தமிழ்நாடு அரசுக்கு இப்படி ஓர் அறிவுரையை யார் வழங்கினார்கள் என்பது தெரியவில்லை. இந்த அரசாணை நடைமுறைக்கு வந்தால் சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு என்ற பெயரில் காவல்துறையினர் அரங்கேற்றும் அத்துமீறல்கள் குறித்த உண்மைகள் மறைக்கப்படும். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை ஆணையம், சாத்தான்குளம் காவல் நிலைய மரணம் குறித்த தகவல்கள் மற்றும் இதே போன்று இனிவரும் காலங்களில் நிகழும் அத்துமீறல்கள் குறித்த தகவல்கள் எதுவுமே இனி வெளிவராமல் மூடி மறைக்கப்படும். இதிலிருந்தே யாரைப் பாதுகாப்பதற்காக இப்படி ஓர் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும். ஒரு நாட்டில் அல்லது மாநிலத்தில் நிகழும் கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள், வழிப்பறிகள் உள்ளிட்ட அனைத்தையும் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை ஆகும். அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்காகத் தான் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அமைக்கப்பட்டு, அதன் மூலம் ஆண்டு தோறும் அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. தமிழக அளவிலும் இது போன்ற தகவல்களை மாநில குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டு வந்தது. கடந்த 2013-14 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்ட இந்த நடைமுறையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று அண்மையில் நிறைவடைந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கூட பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. அதை செய்வதற்கு பதிலாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கூட தரவுகளைப் பெற அரசு தடை விதித்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

சட்டம் – ஒழுங்கு தொடர்பான அரசின் தோல்விகளை மூடி மறைப்பது தான் இந்த அரசாணையின் நோக்கம் ஆகும். இது தவறு. இந்த தகவல்கள் தான் ஒரு மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பதை அளவிடுவதற்கான கருவி ஆகும். தரவுகளை வெளியிட தடை விதிப்பதற்கு பதிலாக சட்டம் – ஒழுங்கை மேம்படுத்துவதற்காக இந்த தரவுகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top