Times of Puducherry

கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேராத நிலையில், முறை வைத்து நீர் திறக்கக் கூடாது: நீரின் அளவை அதிகரித்து அனைத்து ஆறுகளிலும் திறக்க வேண்டும் - அன்புமணி

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
25 Sep 2026 • 4:43 PM
anbumani ramadoss

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஒன்றாம் தேதி காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்னும் கடைமடை பாசனப் பகுதிகளுக்கு முழுமையாக சென்றடையாத நிலையில், கல்லணையிலிருந்து காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் முறை வைத்து தண்ணீர் திறக்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் எந்த ஆற்றின் பாசனப் பகுதியும் பயனடைய முடியாத நிலை உருவாகும் என்று விவசாயிகள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

காவிரியில் திறக்கப்படும் நீரை சிக்கனமாக பயன்படுத்தும் நோக்கத்துடன் கல்லணையிலிருந்து காவிரி மற்றும் கிளை ஆறுகளில் நீரை முறை வைத்து திறக்கும் வழக்கம் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கல்லணையிலிருந்து முதல் 6 நாள்கள் காவிரியிலும், அடுத்த 6 நாள்கள் வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகியவற்றிலும் தண்ணீர் திறக்கப்படும். இது பயனுள்ள நடைமுறை என்பதில் எந்த ஐயமும் இல்லை.

ஆனால், கடைமடை பாசனப் பகுதிகளுக்கு முழுமையாக தண்ணீர் சென்றடைந்த பிறகு தான் முறை வைத்து தண்ணீர் திறப்பது நடைமுறைப்படுத்தப்படும். ஆனால், நடப்பாண்டில் காவிரி பாசனம் நடைபெறும் மயிலாடுதுறை மாவட்டத்தின் கடைமடை பாசனப் பகுதிகளுக்கும், வெண்ணாறு பாசனம் நடைபெறும் நாகை மாவட்டத்தின் கடைமடை பாசனப் பகுதிகளுக்கும் இன்னும் தண்ணீர் சென்று சேரவில்லை. இதற்கு காரணம் தொடக்கத்தில் வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதமும், பின்னர் வினாடிக்கு 12,000 கன அடி வீதமும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது தான்.

மேட்டூர் அணையிலிருந்து ஓரிரு வாரங்களாவது வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி முதல் 22 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டால் தான் பாசனக் கால்வாய்கள் வழியாக கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையும். ஆனால், இம்முறை மிகக் குறைவான அளவிலேயே தண்ணீர் திறக்கப்பட்டதால் கடைமடைப் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீ ர் சென்று சேரவில்லை. இத்தகைய சூழலில் முறைப்பாசனத்தின் அடிப்படையில் காவிரியில் வினாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படும் நிலையில், வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகியவற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 1500 கன அடியாகவும் குறைக்கப்பட்டு விட்டது. இதன்காரணமாக எந்த ஆற்றிலும் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேர வாய்ப்பில்லை. அதனால் கடைமடை பாசன விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.

அனைத்து ஆறுகளிலும் இன்னும் இரு வாரங்களுக்கு முறை வைக்காமல் கூடுதல் நீர் திறக்கப்பட்டால், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையும். அதன்பின் முறை வைத்து தண்ணீர் திறந்தாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே, முறைப்பாசனத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, அனைத்து ஆறுகளிலும் போதிய நீரை திறக்க அதிகாரிகளுக்கு அரசு ஆணையிட வேண்டும். இதற்கு வசதியாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவையும் குறைந்தது 10 நாள்களுக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி என்ற அளவுக்கு அதிகரிக்க வேண்டும்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top