Times of Puducherry

தற்காலிக சபாநாயகர் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என நிரூபித்தால் பதவியை ராஜினாமா செய்ய தயார் - அன்பழகன்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
29 Sep 2026 • 2:21 PM
anbalagan-campaign-aligation-narayanasamy

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்திய அரசியலமைப்பு தேர்தல் சம்பந்தமாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950 (Representation of the People Act) மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 தேர்தல் நடைமுறை சட்டம் 1961 (Conduct of Election Rule 1961) பல சட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி சட்டமன்ற சபாநாயகர் அல்லது தற்காலிக சபாநாயகர் தனது கட்சி வேட்பாளருக்கோ அல்லது கூட்டணி கட்சி வேட்பாளருக்கோ தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என தடை விதிக்கப்படவில்லை. ஆனால் தனது அதிகாரப்பூர்வ அரசு வாகனம், அரசு ஊழியர்கள், அரசு அலுவலகம், அரசு இயந்திரத்தை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக்கூடாது இது தான் சட்டம்.

கிஹோட்டோ ஹோல்லோஹன் வழக்கு 1992 (Kihoto Hollohan vs Zachillhu & Others – 1992) உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் வழங்கப்பட்ட தீர்ப்பில் சபாநாயகர் ஒரு அரசியல் கட்சியால் முன்மொழியப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுபவர். சபாநாயகர் அவைக்குள் மட்டுமே நடுநிலையாளராக செயல்பட வேண்டும். அவைக்கு வெளியே அவரது அரசியல் சார்புகள் மற்றும் தேர்தல் பிரச்சாரங்கள் மீது எந்த தடையும் இல்லை என தீர்ப்பு வழங்கியது.

முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மெத்த சட்டம் படித்த சட்ட வல்லுநர் ஆவார். தற்காலிக சபாநாயகர் பொறுப்பில் உள்ள நான் தேர்தல் பிரச்சாரம் செய்வது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் மற்றும் தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறிய செயல் என்றும். இதுசம்பந்தமாக என் மீதும் வேட்பாளர் அசோக் ஆனந்த் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்கிறார். இந்திய அரசியலமைப்பு சட்டம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் தேர்தல் நடைமுறை சட்டம் இதில் ஏதாவது ஒன்றிலாவது தற்காலிக சபாநாயகர் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என நிரூபித்தால் எனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய நான் தயார். அப்படி இல்லையென்றால் அரசியலை விட்டுவிட நாராயணசாமி தயாரா?

அரசியலமைப்பு சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தேர்தல் நடைமுறை சட்டம், உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு அமர்வு தீர்ப்பு ஆகியவற்றிற்கு எதிராக எனது பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துகின்ற விதத்தில் தொடர்ந்து இதுபோன்ற பொய் கருத்துக்களை கூறிவரும் திரு.நாராயணசாமி அவர்கள் மீது நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடரும் நிலை ஏற்படும்.

திரு.நாராயணசாமி அவர்கள் முதலமைச்சராக இருந்த போதே பெரிய சட்ட நிபுணர் என்ற நினைப்பில் நீதிமன்றத்திற்கு சென்று தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட துணைநிலை ஆளுநருக்கு தான் அதிகாரம் உண்டு என்ற தீர்ப்பையும் வாக்குரிமை இல்லாத நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள வாக்குரிமை அதிகாரத்தையும் பெற்று தந்த சட்ட வல்லுநர் தான் திரு.நாராயணசாமி என்பதை நாடு அறியும்.

இவர் வழக்கு தொடர்ந்து பெற்று தந்த தீர்ப்புக்கு பிறகு இலைமறை காயாக இருந்த அதிகாரங்கள் ஒட்டுமொத்தமாக துணைநிலை ஆளுநருக்கு மடைமாற்றம் செய்த பெருமை முன்னால் முதலமைச்சர் நாராயணசாமியையே சாரும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் செல்வாக்கு மிக்க ஒரு முதலமைச்சருக்கு தவறு செய்யும் அதிகாரிகளை துணைநிலை ஆளுநர் அவர்களின் சம்பந்தம் இல்லாமல் மாற்றம் செய்ய முடியாத நிலையை உருவாக்கியவர் இவர்தான் என்பதை அவரே உணர்ந்து கொள்ளாமல் இருப்பது துரதிர்ஷ்டமாகும்.

நடைபெற இருக்கும் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. இந்த தேர்தல் மூலம் அத்தொகுதி வளம் பெறவும் படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைத்திட உள்கட்டமைப்பு வசதிகள் பெருகிட ஆளும் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள அதிமுக ஆதரவு பெற்ற என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரான திரு.அசோக் ஆனந்த் அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டியது அத்தொகுதியின் வாக்காளர்களுடைய கடமையாகும். எதிர்கட்சிகளின் பொய் பிரச்சாரத்தை நம்பி தங்களது எதிர்காலத்தை வீணடித்துக்கொள்ளாமல் மக்கள் தம்பி அசோக் ஆனந்த் அவர்களுக்கு ஜக்கு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என அதிமுக மாநில செயலாளர் என்ற முறையில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top