Times of Puducherry

அனைத்தையும் தனியாரிடம் கொடுப்பதற்கு எதற்கு ஆட்சி? அரசு? அமைச்சரவை? முதலமைச்சர்? கடுமையாக விமர்சித்த சீமான்.!

எழுதியவர்: Ramprasath S
1 நிமிட வாசிப்பு
29 Sep 2026 • 4:54 PM

அனுபவமற்ற தனியார் நிறுவன பணியாளர்களை நியமித்தால் மின்கணக்கீடு மேலும் குளறுபடியாகாதா? வீடுகளுக்கான மின் கணக்கீட்டுப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை தவெக அரசு  உடனடியாகக் கைவிட வேண்டும் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். 

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகப் பணியிடங்களை நிரப்பாமல், பணியாளர் பற்றாக்குறையைக் காரணம் காட்டி மின் கணக்கீட்டுப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க தவெக அரசு முடிவெடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மின்சாரம் என்பது வெறும் வணிகப்பொருள் மட்டுமல்ல; மக்களின் அன்றாட வாழ்வோடு நேரடியாகப் பிணைந்துள்ள அடிப்படைத் தேவையாகும். அதன் பயன்பாட்டைக் கணக்கிடும் மிக முக்கிய பணியைத் தனியாரிடம் தாரைவார்ப்பது எவ்வகையில் நியாயமாகும்?

மின்வாரியத்தில் போதிய பணியாளர்கள் இல்லை என்றால், அந்த காலிப்பணியிடங்களை இத்தனை மாதங்களாக ஏன் அரசு நிரப்பவில்லை? மின்துறையில் போதிய பணியாளர்களை நியமிக்காதது யாருடைய தவறு? அரசின் நிர்வாகத் தவறுக்கு, அரசுப் பணியைத் தனியாரிடம் ஒப்படைப்பது எப்படி தீர்வாகும்? அரசு வேலைக்காக இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் காத்திருக்கையில், அவர்களுக்கு நிரந்தரப் பணியை வழங்காமல், இருக்கின்ற பணிகளையே ஒப்பந்த முறையில் தனியாரிடம் ஒப்படைப்பதுதான் தவெக அரசின்  வேலைவாய்ப்புக் கொள்கையா? இதுதான் மக்களுக்கான மாற்றமா?

தவெக ஆட்சியில் அனுபவமிக்க மின்வாரிய பணியாளர்கள் எடுத்த கணக்கீடுகளிலேயே இலட்சக்கணக்கான வீடுகளில் குளறுபடிகள் ஏற்பட்ட நிலையில், அனுபவமற்ற தனியார் ஒப்பந்தப் பணியாளர்கள் வீடுதோறும் சென்று கணக்கெடுக்கும்போது, தவறான கணக்கீடு ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது? மின் கணக்கீடு தாமதமாகி அதனால்  மக்களுக்கு மேலும் அதிக கட்டணம் செலுத்த நேரிடாதா? அதிகப்படியான மின் கட்டணம் விதிக்கப்பட்டால் மக்கள் யாரிடம் முறையிட வேண்டும்? தனியார் நிறுவனத்திடமா? தவெக அரசிடமா? ஒப்பந்த நிறுவனம் தவறு செய்தால் அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தால் பொதுமக்களின் நுகர்வு மற்றும் தனிப்பட்ட தகவல்கள் எப்படி பாதுகாக்கப்படும்? இதுதான் தவெக அரசின் தொலைநோக்கு சிந்தனையா?  இதற்கு பெயர்தான் தூய ஆட்சியா? வெட்கக்கேடு!

பணியாளர்கள் பற்றாக்குறை என்றால், அதற்கான தீர்வு பணியாளர்களை நியமிப்பதுதானே தவிர தனியார்மயம் அல்ல என்பதை அரசு எப்போது உணரப்போகிறது? இன்றைக்கு மின் கணக்கீட்டுப் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. நாளை மின்வாரியமே தனியாரிடம் ஒப்படைக்கப்படாது என்பது என்ன நிச்சயம்? வானூர்தி நிலையம் முதல் மின்வாரியப் பணிகள் வரை எல்லாவற்றையும் தனியாரிடம் கொடுத்துவிட்டு, அரசு எதை நிர்வாகம்  செய்யப்போகிறது? வாடகைக்கு விடும் வேலையையா?

இதற்கு எதற்கு ஆட்சி? அரசு? அமைச்சரவை? முதலமைச்சர்? அவற்றையும் தனியாரிடம் கொடுத்தால் வீண்செலவு குறையுமே! பல்லாயிரம் கோடி மக்களின் வரிப்பணம் மிச்சமாகுமே! தமிழ்நாட்டில் உள்ள 3.5 கோடி குறைந்த மின்னழுத்த இணைப்புகள் உள்ள நிலையில், அவற்றில் சுமார் 2.5 கோடி வீட்டு மின் இணைப்புகளாக உள்ளன. கோடிக்கணக்கான மக்களுடன் நேரடித் தொடர்புடைய பணியை மேற்கொள்ள போதிய நிரந்தரப் பணியாளர்களை நியமிப்பதற்கு பதிலாக, தற்காலிக ஒப்பந்த முறையைத் தேர்வு செய்வது மிகமோசமான நிர்வாக நடவடிக்கையாகும்.

எனவே, மின் கணக்கீட்டுப் பணிகளைத் தனியார் ஒப்பந்தப் பணியாளர்களிடம் ஒப்படைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். மின் கணக்கீட்டாளர் உள்ளிட்ட மின்வாரியத்தின் காலிப்பணியிடங்கள் அனைத்தையும் வெளிப்படையான தேர்வு முறையின் மூலம் தகுதியுடைய தமிழ்நாட்டு இளைஞர்களைக் கொண்டு நிரந்தரமாக நிரப்ப வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top