Times of Puducherry
சினிமா மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்று. வார இறுதி வந்துவிட்டால், தியேட்டருக்கு சென்று படம் பார்க்க வேண்டும் என்று பெரும்பாலனவர்கள் விரும்புவார்கள். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் தியேட்டர் மட்டும் இல்லாமல் ஓடிடி தளத்திலும் வித்தியாசமான படங்கள் இருக்கிறதா என்று தேடும் அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்துள்ளது. அந்த வரிசையில் அமேசான் ப்ரைமில் மிஸ் பண்ணக்கூடாத சில படங்களை பார்ப்போம்.
இன்ஷப்ஷன் (Inception)
கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய மிகவும் சிக்கலான மற்றும் யோசிக்க வைக்கும் த்ரில்லர் திரைப்படம் தான் இன்ஷப்ஷன். சிறப்பான கதை மற்றும் புதுமையான காட்சியமைப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இப்படத்தில், அசத்தலான சினிமா காட்சிகளுடன் ஹான்ஸ் சிம்மரின் பின்னணி இசையும் இணைந்து, கனவுக்கும் நிஜத்துக்கும் இடையிலான மிகவும் நுட்பமான எல்லைகளை ஆராயும் கதைக்கு கூடுதல் ஆழத்தை அளிக்கிறது.
டோம் கோப் (லியோனார்டோ டிகாப்ரியோ) என்பவர் நவீன கனவு பகிர்வு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நிறுவனங்களின் ரகசியங்களைத் திருடுவதில் ஒரு திறமையான திருடன். ஒரு கட்டத்தில் தனது திருட்டு தொழிலை விடுவதற்கு அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அந்தப் பணியில் ஒரு வித்தியாசமான திருப்பம் உள்ளது. ஒரு எண்ணத்தைத் திருடுவதற்குப் பதிலாக, ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் மனதில் அந்த எண்ணத்தை விதைக்க வேண்டும் என்பது தான். இதை அவர் எப்படி செய்தார் என்பதே மீதிக்கதை.
தி ஷஷாங் ரிடிம்ஷன் (The Shawshank Redemption)
சினிமா ரசிகர்களின் மனதில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் படங்களில் ஒன்று தி ஷஷாங் ரிடிம்ஷன். ஃபிராங்க் டராபோன்ட் இயக்கிய இந்த படம் செய்யாத தவறுக்கான சிறை தண்டனை அனுபவிக்கும் ஒருவன் அங்கிருந்து எப்படி தப்பிக்கிறான் என்பது தான் கதை. நம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் மன உறுதி போன்ற கருப்பொருட்களை இப்படம் அழகாக வெளிப்படுத்துகிறது. படத்தின் மெதுவான கதை நகர்வும், இறுதியில் மிகச் சிறப்பான முடிவை நோக்கி கதை நகரும் விதமும் பார்வையாளர்களை முழுமையாக ஈர்க்கிறது.
தி சோஷியல் நெட்வொர்க் (The Social Network)
ஃபேஸ்புக் உருவான வரலாற்றை மையமாகக் கொண்ட ஒரு திரைப்படம் இவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. டேவிட் ஃபின்சர் இயக்கிய இந்த திரைப்படம் வேகமான திரைக்கதை மற்றும் துல்லியமான கதை சொல்லல் கொண்டது. மார்க் ஸக்கர்பெர்க் (ஜெஸ்ஸி ஐசன்பெர்க்) மற்றும் ஃபேஸ்புக் உருவான விதம், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சட்டப் போராட்டங்கள் ஆகியவற்றை இப்படம் எடுத்துக்காட்டுகிறது.
கணினி நிரலாக்கம் மற்றும் நீதிமன்றக் காட்சிகளுக்கு அப்பால், தனிமை மற்றும் சிதைந்த மனித உறவுகள் பற்றிய எதிர்பாராத உணர்ச்சிகரமான அம்சமும் இப்படத்தில் உள்ளது. இதனால் இது வெறும் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட திரைப்படமாக இல்லாமல், மனித உணர்வுகளைப் பேசும் படமாகவும் மாறுகிறது.
மிமெண்டோ (Memento)
கிறிஸ்டோபர் நோலன் சினிமா உலகில் புகழ்பெற்ற இயக்குநராக விளங்குவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று இந்த மிமெண்டுடொ திரைப்படத்தைக் குறிப்பிடலாம். இந்த சைக்கலாஜிக்கல் த்ரில்லர், நான் லீனியர் திரைக்கதை, ஹீரோவுக்கு குறுகிய கால நினைவிழப்பு (Anterograde Amnesia) பாதிக்கப்பட்ட லியோனார்டு (கை பியர்ஸ்) என்ற நடுத்தர வயது மனிதர், தனது மனைவியைக் கொன்றவரைத் தேடும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
கதை பின்னோக்கி சொல்லப்படும் விதம் பார்வையாளர்களை லியோனார்டின் குழப்பமான மனநிலைக்குள் நேரடியாக அழைத்துச் செல்கிறது. இதுவே இப்படத்தின் மிகச் சிறப்பான அம்சங்களில் ஒன்றாகும். படம் முடிவடையும் நேரத்தில், மிமெண்டோ நம்மை ஆச்சரியப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஒருவிதமான மனஅமைதியற்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது.
டம்பேட் (Tumbbad)
ராஹி அனில் பார்வே மற்றும் ஆனந்த் காந்தி இணைந்து உருவாக்கிய டம்பேட் இந்திய சினிமாவில் இதுவரை பார்த்திராத வகையிலான தனித்துவமான திரைப்படமாகும். திகில், கற்பனை மற்றும் புராணக் கூறுகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், சாபமிடப்பட்ட ஒரு தெய்வத்துடன் தொடர்புடைய மறைக்கப்பட்ட புதையலைத் தேடும் விநாயக் ராவ் (சோஹம் ஷா) என்பவரை மையமாகக் கொண்டுள்ளது.
படத்தின் அச்சமூட்டும் காட்சியமைப்பும், மெதுவாக ஆனால் ஆழமாக நகரும் திரைக்கதையும் பார்வையாளர்களின் மனதில் நீண்ட காலம் பதியும் வகையில் அமைந்துள்ளன. சோஹம் ஷாவின் தீவிரமான நடிப்பும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
ட்ரோய் (Troy)
எப்போதும் பார்வையாளர்களை கவரும் பிரம்மாண்டமான வரலாற்றுத் திரைப்படங்களில் ஒன்றாகும். இப்படம் அக்கிலீஸ் (பிராட் பிட்) என்ற அஞ்சாத வீரரை மையமாகக் கொண்டுள்ளது. போர்க்களத்தில் ஒப்பற்ற திறமை கொண்ட அக்கிலீஸின் வீரத்திற்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. இளவரசர் பாரிஸ் (ஆர்லாண்டோ ப்ளூம்), ஹெலனை (டயான் க்ரூகர்) அழைத்துச் சென்றதைத் தொடர்ந்து, கிரேக்கர்கள் டிராய் நகரை முற்றுகையிடுகின்றனர்.
பிராட் பிட்டின் கம்பீரமான நடிப்பு, பிரம்மாண்டமான போர்க் காட்சிகள், மிகப்பெரிய அளவிலான தயாரிப்பு மற்றும் அசத்தலான ஒளிப்பதிவு ஆகியவை ட்ரோய் திரைப்படத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றுகின்றன. அடுத்து என்ன படம் பார்ப்பது என்று முடிவு செய்ய முடியாத நேரங்களில் பார்க்கத் தேர்வு செய்யக்கூடிய திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும்.
த்ரிஷ்யம் (Drishyam)
மோகன்லால் நடிப்பில் வெளியான 2013ஆம் ஆண்டின் பாராட்டைப் பெற்ற மலையாள திரைப்படத்தின் இந்தி ரீமேக்காக த்ரிஷ்யம் உருவாக்கப்பட்டது. அஜய் தேவ்கன், விஜய் சல்காவோன்கர் என்ற சாதாரண கேபிள் ஆபரேட்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அமைதியாகச் சென்று கொண்டிருக்கும் அவரது குடும்ப வாழ்க்கை, எதிர்பாராத ஒரு சம்பவத்தால் தலைகீழாக மாறுகிறது. அந்தச் சம்பவம் அவரது குடும்பத்தைப் பிரிக்கும் அளவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறுகிறது.
சினிமா குறித்த தனது அறிவைப் பயன்படுத்தி, காவல்துறையினருடன் அறிவுப்பூர்வமான ஒரு கடுமையான போராட்டத்தில் விஜய் ஈடுபடுகிறார். அவரை எதிர்கொள்ளும் காவல் அதிகாரியாக தபு நடித்துள்ளார். கச்சிதமாக பின்னப்பட்ட திரைக்கதை, எதிர்பாராத கதைத் திருப்பங்கள் மற்றும் தொடக்கம் முதல் இறுதி வரை நம்மை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் ஆகியவை த்ரிஷ்யம் திரைப்படத்தை மிகச்சிறந்த கிரைம் த்ரில்லர்களில் ஒன்றாக மாற்றுகின்றன.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.