Times of Puducherry

ரூ 534 கோடி சொத்தை உழைத்து சம்பாதித்தாரா? மாமனார் சொத்தை அபகரித்தாரா?: ஆதவ் அர்ஜுனாவை விளாசிய அ.தி.மு.க

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
29 Sep 2026 • 10:54 PM
AIADMK attack Minister Aadhav Arjuna rs 534 crore assets

அ.தி.மு.க அதன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:-

இன்று காலை செய்தியாளர் சந்திப்பில் பொதுப்பணித் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா மிக மோசமான ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களின் மகன், கட்சியில் அடிப்படை உறுப்பினர் தவிர எந்த பொறுப்பும் வகிக்காத போது, அவரைப் பற்றி வாய்க்கு வந்ததை அவதூறாக அள்ளி வீசுவது கடும் கண்டனத்திற்குரியது.

“சொத்து அபகரிப்பு” என்ற சொல்லை உச்சரிக்க இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? எங்களைப் பொறுத்தவரை, கழகப் பொதுச் செயலாளராக மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் பதவியேற்ற பிறகு, கழகத்தின் சொத்துகள், வங்கி இருப்புகள் உயர்ந்து இருக்கிறதே தவிர குறையவில்லை என்பதை வெளிப்படையாக தெரிவிக்கிறோம்.

சாதாரண சத்துணவுப் பணியாளரின் மகனாகப் பிறந்த “எளிய மனிதரான” திரு. ஆதவ் அர்ஜுனா, 2026 தேர்தல் Affidavit-ல் காட்டிய சொத்துகளின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? 534.90 கோடி ரூபாய். இவரின் குடும்ப சொத்துகளைச் சேர்த்தால் பல ஆயிரம் கோடிகள் கூட இருக்கலாம்.

இவ்வளவு சொத்தை திரு. ஆதவ் அர்ஜுனா உழைத்து சம்பாதித்தாரா என்ன? எப்படி இவ்வளவு சொத்து வந்தது என்பதை இந்த வாய்ச்சொல் வீரர் பொதுவெளியில் சொல்வாரா? தன் மாமனார் சொத்தை அபகரித்து தான் ஆதவ் அர்ஜுனா அவர்களின் சொத்து வந்திருக்கிறது என்று நாங்கள் சொல்லலாமா?

அதேபோல், அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை, எங்கள் கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியின் சுதந்திர முடிவையும் மதிக்கும் பக்குவம் எங்களுக்கு உள்ளது. தங்கள் கூட்டணியில் இருக்கும் கல்லாப்பெட்டி கட்சிகளை கிஞ்சற்றும் மதிக்காமல், “நீங்கள் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளுங்கள், நானெல்லாம் வரமாட்டேன்” என்று நவீன தீண்டாமையை கூட்டணியிலேயே கடைபிடிக்கும் ஒரு கட்சித் தலைவரை ஏற்றுள்ள ஆதவ் அர்ஜுனா அவர்கள், எங்கள் கூட்டணியைப் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூலதனம் எங்கள் தொண்டர்கள் தான். கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும், எங்கள் கழகத்தின் தொண்டர்கள் உழைப்பில் நின்று வெற்றிபெறக் கூடிய தெம்பு, திராணி எங்களுக்கு உள்ளது. தி.மு.க-வுக்கு அளித்த வாக்குகளால் வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்.எல்.ஏ-களிடம் இரவல் பெற்று ஆட்சியின் ஒவ்வொரு நாளையும் கடத்திக் கொண்டிருக்கும் த.வெ.க-வுக்கு, கழகம் என்றால் உயிரைக் கொடுத்து உழைக்கும் எங்கள் இயக்கத்தைப் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top