Times of Puducherry

பாதாம், முந்திரி எதுக்கு? உடல் கொழுப்பை குறைக்க ஒரு கைப்பிடி வேர்க்கடலை போதும்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
15 Sep 2026 • 3:38 PM
a handful of peanuts is all you need to reduce body fat

வேர்க்கடலை என்பது எளிமையாகவும் மலிவாகவும் கிடைக்கக்கூடிய ஒரு சத்துமிக்க உணவுப் பொருளாகும். பாதாம், முந்திரி போன்ற அதிக விலையுள்ள கொட்டைகளில் இருக்கும் அதே அளவிலான ஊட்டச்சத்துக்கள் வேர்க்கடலையிலும் நிறைந்துள்ளதால், இது "ஏழைகளின் பாதாம்" என்று அழைக்கப்படுகிறது. வேர்க்கடலையை அவித்து அல்லது வறுத்து தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்

வேர்க்கடலையில் 'மோனோ அன்சாச்சுரேட்டட்' (Monounsaturated) மற்றும் 'பாலி அன்சாச்சுரேட்டட்' (Polyunsaturated) போன்ற உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இது இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது.

மாரடைப்புத் தடுப்பு

இதில் உள்ள 'ரெஸ்வெராட்ரோல்' (Resveratrol) என்ற சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் இரத்த குழாய்களை பாதுகாத்து, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

மூளை வளர்ச்சி – ஞாபக சக்தி மேம்படும்

வேர்க்கடலையில் உள்ள நியாசின், அதாவது வைட்டமின் பி3 மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை சீராக்கி, ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. இதில் உள்ள 'டிரிப்டோஃபேன்' (Tryptophan) என்ற அமினோ அமிலம், மனநிலையைச் சீராக வைக்கும் 'செரோடோனின்' சுரப்பை அதிகரித்து மன அழுத்தத்தைப் போக்குகிறது.

நியாசின் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வயது முதிர்வால் ஏற்படும் ஞாபக மறதி நோயான அல்சைமர் வராமல் தடுக்க உதவுகின்றன.

உடல் எடையை குறைக்க உதவும்

புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், வேர்க்கடலையைச் சாப்பிடும் போது வயிறு நிறைந்த உணர்வு பல மணி நேரம் நீடிக்கும். நொறுக்குத் தீனிகளை உண்பதைத் தடுத்து, ஆரோக்கியமான முறையில் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த சிற்றுண்டியாகும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது

வேர்க்கடலையின் கிளைசெமிக் இன்டெக்ஸ் மிகக் குறைவு. இதனால் இதனைச் சாப்பிடும் போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்காது. இதில் உள்ள மெக்னீசியம் (Magnesium) சத்து உடலின் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, டைப்-2 சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

எலும்புகள் மற்றும் சரும பாதுகாப்பு

வேர்க்கடலையில் உள்ள மாங்கனீசு, பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் எலும்புகளை வலுவாக்க உதவுகின்றன. வைட்டமின் இ மற்றும் துத்தநாகம் (Zinc) சருமத்தில் சுருக்கங்கள் விழுவதைத் தடுத்து, இளமையான தோற்றத்தைத் தக்கவைக்க உதவுகிறது.

யாருக்கெல்லாம் வேர்க்கடலை ஒத்துக்கொள்ளாது?

சிலருக்கு வேர்க்கடலை சாப்பிட்டால் தோல் தடிப்பு, மூச்சுத்திணறல் போன்ற அலர்ஜி ஏற்படலாம். அவர்கள் இதைத் தவிர்க்க வேண்டும். அதிக அளவில் வறுத்த வேர்க்கடலை சாப்பிடுவது சிலருக்கு பித்தம், நெஞ்செரிச்சல் அல்லது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தலாம். வேர்க்கடலையை வறுத்துச் சாப்பிடுவதை விட, நீரில் ஊறவைத்து அல்லது அவித்துச் சாப்பிடுவதே முழுமையான ஊட்டச்சத்தையும் எளிதான செரிமானத்தையும் தரும்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top