Times of Puducherry
ரூ.20,000 முதலீட்டில் வீட்டிலிருந்தபடியே தொடங்கி நல்ல லாபம் ஈட்டக்கூடிய ஐந்து சுய தொழில்களைப் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
தையல் அல்லது ஆடை வடிவமைப்பு
எவ்வளவுதான் ரெடிமேடு கலாச்சாரம் வளர்ந்திருந்தாலும், தையல் துறைக்கு என்று தனி மவுசு இருக்க செய்கிறது. தையல் கலை தெரிந்திருந்தால் இது ஒரு லாபகரமான தொழிலாகும். சாதாரண தையல் எந்திரம் அல்லது சிறிய தையல் எந்திரத்தை ரூ.12,000-ல் வாங்க முடியும். நூல், கத்திரிக்கோல், அளவெடுக்கும் டேப், ஆரம்ப கால பொருட்களை ரூ.3,000 முதல் ரூ.5,000-ல் வாங்கலாம். பெண்களுக்கு ரவிக்கை தைப்பதுஔ சுடிதார் தைப்பது ஆல்டரேசன் வேலைகள் செய்வதன் மூலம் மாதம் ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை எளிதாக சம்பாதிக்க முடியும். ஆரி ஒர்க் அல்லது எம்பிராயிடரி கற்றுக் கொண்டால் கூடுதல் லாபம் கிடைக்கும்.
இயற்கை சோப் அல்லது மெழுகுவர்த்தி
இயற்கை மூலிகை சோப்புகள் மற்றும் வாசனை மெழுகுவர்த்திகளுக்கு தற்போது சந்தையில் அதிக தேவை உள்ளது. மெழுகு அச்சுப் படிவங்கள், வாசனை எண்ணெய்கள், சோப் பேஸ், மற்றும் வண்ணங்கள் ஆகியவற்றை குறைந்த முதலீட்டில் வாங்க முடியும். இன்ஸ்டாகிராம் மற்றும் whatsapp மூலம் ஆர்கானிக் தயாரிப்புகளாக விற்பனை செய்தால் மாதம் ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை லாபம் ஈட்டலாம். குறிப்பாக பரிசுப் பெட்டிகளாக செய்து பண்டிகை மற்றும் திருமண காலங்களில் விநியோகிக்கும் பொழுது லாபம் மேலும் அதிகரிக்கும்.
வீட்டில் தயாரிக்கும் திண்பன்டங்கள் அல்லது ஊறுகாய்
சமையல் கலையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு குறைந்த ரிஸ்க் கொண்ட தொழிலாக வீட்டில் தயாரிக்கும் தின்பண்டங்கள் மற்றும் ஊறுகாய் தொழில் உள்ளது. எண்ணெய், மசாலா, காய்கறிகள், தரமான பாட்டில்கள், சீலிங் மெஷின், உணவு பாதுகாப்பு உரிமம் ஆகியவற்றை சிறிய முதலீட்டில் வாங்க முடியும். அருகில் உள்ள மளிகை கடைகள், அலுவலகங்கள் மற்றும் நண்பர்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் மாதம் ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை லாபம் ஈட்டலாம். பாரம்பரிய பலகாரங்களான முறுக்கு, சீடை, ஆர்கானிக் தொக்கு போன்ற வகைகளுக்கு சந்தையில் அதிக வரவேற்பு உள்ளது.
கைவினைப் பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் தயாரிப்பு
டெரகோட்டா, சில்க் திரெட் மற்றும் ரெசின் ஆபரணங்களுக்கு பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளிடையே அதிக வரவேற்பு உள்ளது. மணிகள், சில்க் நூல்கள், கொக்கிகள், ரெசின் கிட், ஜம்பரிங், பேக்கிங் கவர்கள் மற்றும் பிராண்டிங் கார்டுகள் ஆகியவற்றுக்கு ரூ.10,000 வரை முதலீடு தேவைப்படலாம். ஆன்லைன் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் இதை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் பொழுது 50% வரை லாபம் கிடைக்கும். ட்ரெண்டிங்கில் உள்ள டிசைன்களை ரீல்ஸாக பதிவிட்டு கூடுதல் ஆர்டர்களைப் பெறலாம்.
கிளவுட் கிச்சன்
இல்லத்தரசிகளுக்கு கிளவுட் கிச்சன் என்பது மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். வீட்டில் நாம் சமைக்கும் உணவை ஆன்லைன் உணவு விற்பனை தளங்களில் பதிவிட்டு, அதன் மூலம் லாபம் ஈட்ட முடியும். தற்போது பலரும் ஆர்கானிக் உணவுகளை விரும்புவதால் சிறு தானிய உணவுகள், மூலிகை உணவுகளை ஆன்லைனில் விற்பனை செய்யலாம் அல்லது காய்கறி சாலட், பழங்கள் சாலட் போன்ற சாலட் பொருட்களையும் விற்பனை செய்வதன் மூலம் கணிசமான லாபத்தை ஈட்ட முடியும். இதற்கு குறைந்த முதலீடு போதுமானது.
உங்கள் தயாரிப்புகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை whatsapp ஸ்டேட்டஸ், instagram, ஃபேஸ்புக்கில் தொடர்ந்து பதிவிடுங்கள். பொருட்களின் தரமும் கவர்ச்சிகரமான பேக்கிங்கும் வாடிக்கையாளர்களை மீண்டும் உங்களிடம் வரவழைக்கும். ஆரம்பத்தில் நியாயமான விலையில் வழங்கி வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுங்கள்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.