Times of Puducherry
தட்டாஞ்சாவடி மக்களின் குரல் சட்டமன்றத்தில் ஓங்கி ஒலிக்கமக்கள் தொண்டன் சேது செல்வத்தை ஆதரியுங்கள்திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வேண்டுகோள். புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வரும் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சேதுசெல்வதை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் மக்களின் நலத்துக்கும், வளத்துக்கும் பல்லாண்டு காலமாக பங்காற்றிய இயக்கம் திமுக என்பது புதுவை மக்களாகிய உங்களுக்கு நன்றாகவே தெரியும். 1979-ம் ஆண்டு புதுச்சேரியின் தனித்தன்மையை காக்க பாண்டுரங்கன் என்ற திமுக தோழரையே இழந்து, புதுச்சேரிக்கு வந்த சோதனையை தடுத்து நிறுத்தியது திமுக.
கடந்த சில ஆண்டுகளாகவே துணைநிலை ஆளுநர்கள் மூலமாக ஆபத்து வந்தபோதும், இந்த மாநிலத்துக்காக போராடிய இயக்கம் திமுக. புதுச்சேரியில் திமுக ஆட்சி நடந்தபோதெல்லாம் புதிய, புதிய திட்டங்களை இந்த மாநிலத்துக்கு நிறைவேற்றி இருக்கிறோம். சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்ற கலைஞரின் வாக்குப்படி புதுச்சேரி வளர்ச்சிக்காக பாடுபட்டு இருக்கிறோம்.
தாலிக்கு தங்கம் திட்டம், சத்துணவில் முட்டை திட்டம், உங்கள் கண்ணெதிரே சிறப்பாக செயல்பட்டு வரும் லாஸ்பேட்டை உழவர் சந்தை போன்றவை திமுக அரசின் காலத்தை வெல்லும் சாதனைகள். இதையெல்லாம் மனதில் வைத்து நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தட்டாஞ்சாவடி வாக்காளர்கள் எதிர்கொண்டுள்ள இந்த இடைத்தேர்தல் இயற்கையாக நடக்கிற தேர்தல் கிடையாது. உங்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல். முதல்வர் ரங்கசாமி கடந்த பொதுத்தேர்தலில் 2 தொகுதிகளில் நின்றார். வெற்றியும் பெற்றார். சட்டப்படி ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற நிலையில் தட்டாஞ்சாவடி தொகுதியை கைவிட்டு விட்டார். அதாவது அவரை நம்பி வாக்களித்த உங்களை கை கழுவிவிட்டார். அதனால் இந்த முறை நீங்களும் அவரை கைவிட்டு விடுங்கள்.
இந்த இடைத்தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி வேட்பாளராக ஒருவரை முதல்வர் நிறுத்தி இருக்கிறார். அவர் யார் என்பது என்னைவிட உங்களுக்கு நன்றாக தெரியும். கடந்த தேர்தலில் அந்த நபர் போட்டியிட நீதிமன்றம் ஏன் தடை விதித்தது என்று உங்களுக்கு தெரியும். அப்படிப்பட்ட ஒருத்தரைதான் முதல்வர் ரங்கசாமி வேட்பாளராக நிறுத்தி இருக்கிறார். மறுபுறம் காங்கிரசும் அவர்களது பங்குக்கு ஒரு வேட்பாளரை நிறுத்தி இருக்கிறது. என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் ஊழல் சாம்ராஜ்ஜியத்திற்கு சொந்தக்காரர் என்றால், காங்கிரஸ் வேட்பாளர் சாராய சாம்ராஜ்ஜியத்திற்கு சொந்தக்காரராக இருக்கிறார் என்று புதுவையில் எல்லோருக்கும் தெரிந்து இருக்கிறது.
திமுக வேட்பாளர் சேதுசெல்வம் எளிய, நேர்மையான பின்புறம் கொண்டவர். அடித்தட்டில் உழைக்கும் வர்க்கத்தில் பிறந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பிரதிநிதிதான் நம்முடைய வேட்பாளர்கள். தொழிலாளர்களுக்காக போராடி சிறை சென்றிருக்கிறார். அவரை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரக்கூடியவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். சேதுசெல்வதை நீங்கள் தேர்ந்தெடுத்தால் உங்களுக்காக உண்மையாக உழைப்பார் என்று உறுதி அளிக்கிறேன்.
கடந்த காலங்களில் இந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ரங்கசாமி, உங்களுக்காக செய்த நன்மைகள் என்று எதுவும் இல்லை. அதைவிட கொடுமை இந்த தொகுதிக்கு ஒரு எம்எல்ஏ அலுவலகம் கூட இல்லை. இது அவமானம் இல்லையா? நீங்கள் சேதுசெல்வத்திற்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற்ற செய்தால், உங்களுடைய நீண்ட கால கோரிக்கையான இலவச வீட்டு மனைப்பட்டா கிடைக்க உரிய நடவடிக்கைகளை எடுப்பார்.
தட்டாஞ்சாவடியில் உள்ள தொழிற்பேட்டையில் புதிய தொழிற்சாலைகள் அமைய பாடுபடுவார். இந்த தொகுதியில் உள்ள மின் வெட்டு பிரச்னைக்கு தீர்வு காண்பார். தேர்தல் சீசனில் மட்டும் வந்து 10 நாள் திருவிழா போல் தலையை காட்டிவிட்டு செல்பவர் அல்ல திமுக வேட்பாளர். தட்டாஞ்சாவடி தொகுதியில் திமுக ஜெயிச்சு ஆட்சியா மாற போகிறது என்று சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்வது, ஆட்சி மாற்றம் நடந்தாலும் நடக்காவிட்டாலும், தொகுதியின் காட்சி மாற்றம் நடக்கும்.
என்ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சியில் புதுச்சேரி கொலைச்சேரியாக மாறிவிட்டது. ஒரு வாரத்திற்குள் சர்வ சாதாரணமாக 4 கொலைகளாவது நடக்கிறது. பட்டப்பகலில் ஒரு கொலை, நண்பகலில் ஒரு கொலை, சாய்ந்திரம் ஒரு கொலை, நள்ளிரவில் ஒரு கொலை என அடுக்கடுக்காக கொலைகள் நடக்கிறது என்று தொலைகாட்சிகள் மற்றும் நாளிதழ்களில் பார்த்தேன். முதல்வர் ரங்கசாமி என்னதான் செய்து கொண்டிருக்கிறார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் என்னதான் செய்து கொண்டிருக்கிறார். குற்றவாளிகள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்வதற்கு கூட வாய்த்திறக்காத ஆட்சிதான் இப்போது இங்கு நடக்கிறது.
டபுள் இன்ஜின் சர்க்கார் இருந்தால் நல்லாட்சி நடக்கும் என்று சொன்னார்கள். ஒரு இன்ஜினும் இங்கு வேலை செய்வதுபோல் தெரியவில்லை. சட்டம் ஒழுங்கு சீரழிவும், நிர்வாக சீர்குலைவும் புதுச்சேரியை வாட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் தட்டி கேட்க சேதுசெல்வம் வெற்றி பெற வேண்டும். அவர் சட்டமன்ற போனால், எதிர்க்கட்சியின் குரலுக்கு வலு சேர்ப்பார். அதனால்தான் சொன்னேன். ஆட்சி மாறினாலும், மாறாவிட்டாலும் காட்சி மாறும்.
தனக்கு பிரச்னை வரும்போது மட்டும்தான் மாநில அந்தஸ்து அஸ்திரத்தை முதல்வர் ரங்கசாமி கையில் எடுப்பார். சட்டமன்றத்தில் தீர்மானம் போட தெரிந்த முதல்வர் ரங்கசாமி அவர்களே, அதிகாரிகள் தடுக்கிறார்கள் என்று கூப்பாடு போடுகிற ரங்கசாமி அவர்களே, புதுச்சேரி மாநில அந்தஸ்து வேண்டும் என்று எம்எல்ஏக்களை டெல்லிக்கு அழைத்து சென்று போராடலாமே? ஏன் செய்ய மாட்டுகிறீர்கள். உங்கள் கூட்டணி கட்சியிடம் தானே ஒன்றிய அரசு இருக்கிறது.
கடந்த தேர்தலில் புதுச்சேரிக்கு மாநில தகுதி பெற்று தருவேன் என்று சொல்லிதானே ஆட்சிக்கு வந்தீர்கள். நம்பி வாக்களித்த மக்களுக்கு என்ஆர் காங்கிரசும், பாஜகவும் செய்ததெல்லாம் துரோகம் மட்டும்தான். இன்னொரு துரோகமும் களத்தி்ல் நிற்கிறது. கடந்த தேர்தலில் திமுகவின் முதுகில் குத்திய காங்கிரஸ் இங்கு களம் காண்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 5 தொகுதியில் திமுக வேட்பாளர்களை எதிர்த்து கூட்டணியில் இருந்து கொண்டே வேட்பாளர்களை நிறுத்தியது காங்கிரஸ் கட்சி. ஆனாலும், திமுக துரோகத்தை வென்று எடுத்தது. காலாப்பட்டு, ராஜ்பவன் தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். துரோகிகள் படுதோல்வி அடைந்தனர். தட்டாஞ்சாவடி தொகுதியில் காங்கிரசுக்கு டெபாசிட் கூட கிடைக்கக் கூடாது.
புதுச்சேரியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி முடிந்துபோன அத்தியாயம். நமக்கு எதிராக நிற்கிற 2 வேட்பாளர்களுக்கும் இந்த இடைத்தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். சட்டமன்றத்தில் உங்கள் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்றால் திமுக வேட்பாளர் சேதுசெல்வத்திற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.