Times of Puducherry

துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டத்தின் மூலம் பெற்ற சம்பள உயர்வுக்கு முதல்வர் ரங்கசாமி சொந்தம் கொண்டாடுவது அரசியல் நாடகம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
3 Oct 2026 • 3:58 PM
dmksiva-accusation-against-cm

புதுச்சேரி மாநில திமுக சார்பு துப்புரவுத் தொழிலாளர்கள் தங்களுக்கான குறைந்தபட்ச கூலி உயர்வை தொடர்ந்து போராடி பெற்றதை முதல்வர் ரங்கசாமி சொந்தம் கொண்டாடுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என திமுக அமைப்பாளர் இரா. சிவா குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கம்பன் கலையரங்கில் நடைபெற்ற அரசு விழாவில், துணைநிலை ஆளுநருடன் பங்கேற்ற முதல்வர் ரங்கசாமி துப்புரவுத் தொழிலாளர்களுக்கு நாள் கூலி ரூ. 424 ஆக உயர்த்தி வழங்கியதைப்பற்றி பெருமை பேசி உள்ளார். இதில் அவருக்கு எந்த உரிமையோ, பங்கோ இல்லை. கடந்த ஆட்சியில் சட்டமன்றத்தில் பேசிய இவர் அமைப்புசாரா தொழிலாளர் அனைத்துப் பிரிவினருக்கும் குறைந்தபட்ச கூலி நிர்ணயிக்கப்பட்டதாகக் கூறினார். ஆனால் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலியே இவர் அரசு நிர்ணயிக்கவில்லை. அதுபற்றி திமுக துப்புரவுத் தொழிற்சங்கம் குறைந்தபட்ச கூலி வழங்க வேண்டி முதல்வருக்கு மனு அளித்ததுடன், சட்டமன்றம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வலியுறுத்தியது.

தொடர்ந்து துணைநிலை ஆளுநரை சங்கப் பிரதிநிதிகள் சந்திக்க நேரம் கேட்டபோது, ஆளுநர் மறுத்துவிட்டார். பின்பு சங்கத்தின் சார்பில் டெல்லியில் உள்ள சஃபாய் கரம்சாரியின் தேசிய தலைவரை தொடர்பு கொண்டு பிறகு குறைந்தபட்சகூலியை நிர்ணயித்து வழங்க மாவட்ட ஆட்சியர், உள்ளாட்சித்துறை இயக்குநர், தொழிலாளர் ஆணையர் ஆகியோருக்கு அறிவுறுத்தி கடிதம் அனுப்பினார். அதனைத் தொடர்ந்து சங்கப் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர், இயக்குநர், ஆணையர் ஆகியோரை பல முறை நேரில் சந்தித்து வலியுறுத்தியதின் விளைவாக தொழிலாளர் ஆணையர் கூட்டிய கூட்டத்தில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி நிர்ணயிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சென்ற மே மாதம் உள்ளாட்சித் துறை இயக்குநர் அலுவலகம் ரூ. 424 வழங்க அரசாணையை வெளியிட்டு ஜூன் முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இது திமுக சார்பு தொழிற்சங்கத்தின் ஓராண்டு போராட்டமே தவிர ரங்கசாமிக்கு இதில் எள்ளளவும் பங்கில்லை.

முதல்வர் ரங்கசாமி துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ஏதாவது செய்ய நினைத்தால் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக இருந்தபொழுது நிறைவேற்றப்பட்ட காலை உணவுத் திட்டத்தை நிறைவேற்றலாம். துப்புரவுத் தொழிலாளர் சங்கம் முன்னமே முதல்வர் ரங்கசாமி அவர்களுக்கு கொடுத்த கோரிக்கைகளான இலவச பேருந்து கட்டணம், இன்சூரன்ஸ் திட்டம், மாற்றுத் தொழிலுக்கு கடனுதவித் திட்டம் போன்றவைகளை நிறைவேற்றலாமே தவிர எங்கள் சங்கம் வென்றெடுத்த சாதனையை இவர் சொந்தம் கொண்டாடுவது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top