Times of Puducherry
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் அருகே உள்ள பழைய காவிரி பாலத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை பார்வையிட்ட திருச்சி எம்பி துரை வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
திருச்சி பழைய காவிரி பாலத்தின் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காக, கடந்த 25.06.2026 அன்று பாலம் முழுமையாக மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அன்று முதல் பாலத்தில் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆரம்பத்தில், இப்பணிகள் 10.10.2026க்குள் நிறைவடையும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில், பாலம் பணிகள் 10.10.2026க்குள் நிறைவடையும் என பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் தெரிவித்திருந்தேன்.இந்நிலையில், பாலத்தில் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் பணிகள் காரணமாக, பணிகளை நிறைவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீபாவளி பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், பாலம் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும், மாற்றுப்பாதைகளில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் இனியும் காலதாமதம் செய்யாமல், பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பாலத்தைத் திறக்க வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினேன். இதற்கு பதிலளித்த அதிகாரிகள், தற்போது பாலத்தின் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் இரவு பகல் பாராமல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தாங்கள் தெரிவித்துள்ள காலக்கெடுவிற்குள் பணிகள் முழுமையாக நிறைவடைந்து விடும் என்றும் தெரிவித்தனர்.
அதன்படி, திருச்சி பழைய காவிரி பாலத்தின் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் வரும் 15.10.2026க்குள் நிறைவடையும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் என்னிடம் உறுதியளித்துள்ளனர் என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்தார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.