Times of Puducherry

பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி தி.மு.க; வன்மையான கண்டனங்கள்: விஜய் பதிவு

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
3 Oct 2026 • 2:18 PM
TN CM Vijay condemns DMK MK Stalin body shaming speech about dharapuram TVK Can

தாராபுரம் இடைத் தேர்தலை ஒட்டி, தேர்தல் பிரச்சாரம் சூடி பிடித்துள்ளது. இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை தி.மு.க வேட்பாளர் சுகன்யாவுக்கு ஆதரவாக தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். தாராபுரம் உடுமலை சாலையில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் அவர் பேசுகையில், “சத்தியத்திற்கு விரோதமாக செயல்பட்ட அந்த வேட்பாளரை, பெட்டிபாமா, பல்டிபாமா என மக்கள் அழைக்கின்றனர். அந்த உருவத்தை வைச்சுக்கிட்டு எப்படி தான் பல்டி அடிச்சாங்கன்னு தெரியல” என்று உருவக் கேலி செய்யும் வகையில் ஸ்டாலின் பேசினார்.

இந்தநிலையில், முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான மு.க. ஸ்டாலினின் இந்தப் பேச்சுக்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், தங்களது கடும் கண்டங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், ஸ்டாலின் பேச்சுக்கு தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார், அதன் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள். நமது தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி திருமதி சத்தியபாமா அவர்கள் குறித்து, உருவ கேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசிப் புளகாங்கிதம் அடைந்துள்ளார். தி.மு.க. சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை உருவாக்கியதே திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தான்தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் தி.மு.க.வினர். ஆபாசமும் வன்மமும் வக்கிரமும் தி.மு.க.வின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருப்பதைத் தமிழக மக்கள் அனைவரும் காலகாலமாக உணர்ந்தே வைத்திருக்கின்றனர். பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதில், அதிலும் பெண்களை அருகில் வைத்துக்கொண்டே, அவர்கள் அருவருப்பாக உணர்வதைக்கூட கண்டுகொள்ளாமல் பேசுவதில் வல்லவர்களான இந்தத் தீய சக்திக் கூட்டத்திற்குத் தமிழக மக்களும் தாராபுரம் தொகுதி மக்களும் தக்க பதிலடியைக் கொடுக்கத்தான் போகின்றனர். தொடர்ந்து பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி தி.மு.க.விற்குத் தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று கூறியிருக்கிறார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top