Times of Puducherry

மதுக் கடைகளைப் பாதுகாப்பதைவிட மலைகளைக் காப்பது முக்கியம்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி 'இயற்கை வளங்கள் அழிந்தால் திரும்பக் கிடைக்குமா?' — அரசுக்கு நீதிபதிக

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
8 Oct 2026 • 7:41 PM
madras-high-court-madurai-beach-judges-suggestions

மதுக் கடைகளைப் பாதுகாப்பதில் அரசு காட்டும் அக்கறையை, இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் காட்டுவதில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுக் கடைகளைப் பாதுகாப்பதைவிட மலைகளைக் காப்பதே மிக முக்கியம் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நம்மாழ்வார் இயற்கை பாதுகாப்புச் சங்கத் தலைவர் பெத்தணன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், எஸ். பாப்பினைக்கன்பட்டி, சங்கரலிங்கபுரம் ஆகிய கிராமங்களுக்கு அருகே சலுப்பன்காடு, ஓணான்காடு, பெருமாள்மலை ஆகியவை அமைந்துள்ளன. இதில் ஓணான்காடு மலையானது வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியாகும். இங்குப் பண்டைக்காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்விடங்கள், முதுமக்கள் தாழிகள், கல் எச்சங்கள், உருக்கு உலை, சிற்பங்கள், கல்வெட்டுகள் எனச் சுமார் 2,000 முதல் 3,000 ஆண்டுகள் பழமையான தொல்லியல் எச்சங்கள் உள்ளன.

மேலும், இது நிலத்தடி நீரைச் செறிவூட்டும் இயற்கையான நீர்ப்பிடிப்பு மண்டலமாகவும் உள்ளது. இத்தகைய வளம் நிறைந்த மலையில் கல் குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இக்குவாரி செயல்பட்டால் வரலாற்று எச்சங்கள் அனைத்தும் அழியும் அபாயம் உள்ளதால், குவாரி நடத்த அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்” எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள் தெரிவித்ததாவது:

மதுக் கடைகளைப் பாதுகாக்கக் காட்டும் அக்கறையை அரசு பதில் மனு தாக்கல் செய்வதில் காட்டுவதில்லை. மதுக் கடைகளைப் பாதுகாப்பதைவிட மலைகளைக் காப்பதே முக்கியம். இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு அழிந்தால் திரும்பக் கிடைக்குமா? எனக் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக அரசுத் தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top