Times of Puducherry

தஞ்சை-கோவையில் கைதான ஏழு பேருக்கும் பாக். தீவிரவாதிகளுடன் தொடர்பு: இந்தியாவில் நாச வேலைக்கு உடந்தை

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
8 Oct 2026 • 6:02 PM
tanjore-7 arrest-contacts-with-Pakistan-terrorist

கோவையில் தங்கி வேலை செய்வது போல் நடித்து, ஆன்லைன் மூலம் இளைஞர்களைப் பயங்கரவாத செயல்பாடுகளுக்கு ஈர்க்க முயன்ற உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்சூத் அலி (21) என்பவரை கடந்த செப்.6-ம் தேதி தமிழக தீவிரவாத தடுப்புப் பிரிவு உதவியுடன் உத்திர பிரதேச போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல, தஞ்சாவூரில் தடைசெய்யப்பட்ட ‘ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர்’ மற்றும் ‘கிலாபத்’ அமைப்புகளுக்காக ரகசிய வகுப்புகள் நடத்தி இளைஞர்களை மூளைச்சலவை செய்த குற்றச்சாட்டில் யாசர் அப்துல், உமர் முக்தார், ஜாகீர் உசேன், அப்துல், சேக் பரீத், சம்சுதீன் ஆகிய 6 பேரைச் சிறப்புப் பிரிவு மற்றும் தஞ்சை கிழக்கு போலீஸார் கடந்த 1-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தஞ்சை-கோவையில் கைதான ஏழு பேருக்கும் பாக். தீவிரவாதிகளுடன் தொடர்பு: இந்தியாவில் நாச வேலைக்கு உடந்தை

இவர்களது வீடுகளிலிருந்து 20-க்கும் மேற்பட்ட புத்தகங்கள், 5 செல்போன்கள், லேப்டாப் மற்றும் பென்டிரைவ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

தஞ்சை-கோவையில் கைதான ஏழு பேருக்கும் பாக். தீவிரவாதிகளுடன் தொடர்பு: இந்தியாவில் நாச வேலைக்கு உடந்தை

இதே பாணியில் கர்நாடகாவிலும் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, தமிழக தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் மற்றும் என்ஐஏ அதிகாரிகள் இணைந்து நடத்திய தொடர் விசாரணையில், கைதான அனைவரும் பாகிஸ்தானில் இயங்கி வரும் ஷாசாத் பட்டி நெட்வொர்க்குடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது; பாகிஸ்தானில் போதைப்பொருள் கடத்தல்காரராக இருந்த ஷாசாத் பட்டியை, அந்நாட்டின் உளவு அமைப்பான ‘ஐஎஸ்ஐ’ பயங்கரவாதியாக மாற்றி இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தி வருகிறது.
இக்கும்பல் பஞ்சாப் எல்லைப் பகுதி வழியாக ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் நிதி ஆதாரத்துக்காக விலை உயர்ந்த போதைப்பொருட்களைக் கடத்துவது போன்ற நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியாவில் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவது மற்றும் பாதுகாப்புத் துறையின் நகர்வுகளைக் கண்காணிப்பது இவர்களது முக்கியத் திட்டமாகும். இதற்காக உள்ளூர் ஆட்களின் உதவியுடன் சோலார் சக்தியால் இயங்கும் ரகசிய கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி, பாகிஸ்தானில் இருந்தபடியே உளவு பார்த்து வந்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் டெல்லி கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ரகசிய கேமராக்களைப் பொருத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக கைதான 7 பேரிடமும் தொடர் விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்தனர். இந்தியாவில் ஊடுருவி நாசவேலைகளில் ஈடுபட திட்டமிட்டுள்ள இந்த அமைப்புடன் தமிழகத்தில் கைதான 7 பேருக்கும் தொடர்பு இருப்பது அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top