Times of Puducherry
ஜிப்மர் செவிலியர் கல்லூரி, 2006 முதல் 2026 வரையிலான தனது 20 ஆண்டுகால கல்வி, ஆராய்ச்சி மற்றும் சேவைப் பயணத்தைக் குறிக்கும் வகையில், மூன்று நாள் விசெனியல் (20ஆம் ஆண்டு) விழா இன்று தொடங்கியது.
“ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் ஆதார அடிப்படையிலான நடைமுறைகள் மூலம் செவிலியத் துறையை மறுவடிவமைத்தல்” என்ற தலைப்பில் நடைபெறும் தேசிய மாநாடு இன்று ஜிப்மர்-ன் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அரங்கில் தொடங்கி வைக்கப்பட்டது.
தேசிய மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 550 செவிலியர் நிபுணர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டிற்கு தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமம் 11 தொடர் கல்வி (Credit) மணி நேரங்கள்அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
தேசிய மாநாட்டை ஜிப்மர் இயக்குநர் பேராசிரியர் டாக்டர் வீர் சிங் நேகி தொடங்கி வைத்து பேசினார்.
கடந்த இரண்டு தசாப்தங்களாக செவிலியர் கல்வி மற்றும் சுகாதார சேவையில் ஜிப்மர் செவிலியர் கல்லூரி ஆற்றிவரும் முக்கியப் பங்களிப்புகளை அவர் பாராட்டினார். ஆராய்ச்சி சார்ந்த, ஆதார அடிப்படையிலான மற்றும் புத்தாக்கமிக்க சுகாதாரப் பராமரிப்பை முன்னெடுப்பதில் செவிலியர்களின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், செவிலியர் ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை சிறப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
ஜிப்மர் செவிலியர் கல்லூரி உதவிப் பேராசிரியரும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்புச் செயலாளருமான டாக்டர் லட்சுமி ராமமூர்த்தி,2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து கல்லூரியின் வளர்ச்சி மற்றும் சாதனைகளை எடுத்துரைக்கும் 20ஆம் ஆண்டு விழா அறிக்கையை சமர்ப்பித்தார். ஜிப்மர் கல்விப் புல முதல்வர் டாக்டர் விக்ரம் காடே சிறப்பு விருந்தினராக உரையாற்றினார்.
அக்டோபர் 8 மற்றும் 9 ஆகிய இரு நாட்களில் நடைபெறும் தேசிய மாநாட்டில், மருத்துவம் மற்றும் செவிலியத் துறைகளைச் சேர்ந்த முன்னணி நிபுணர்கள் பங்கேற்று, செவிலியர் ஆராய்ச்சி, மருத்துவப் புத்தாக்கம் மற்றும் ஆதார அடிப்படையிலான நடைமுறைகள் தொடர்பான சமகால முன்னேற்றங்கள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
நிபுணர் உரைகள், அறிவியல் கலந்துரையாடல்கள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகளின் விளக்கக்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிகழ்வுகள் மாநாட்டில் இடம்பெறுகின்றன.
நாடு முழுவதும் செவிலியர் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சிகள், புதிய அறிவியல் அணுகுமுறைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான முக்கிய தேசிய தளமாக இம்மாநாடு அமைகிறது.
தேசிய மாநாடு 9 அக்டோபர் 2026 அன்று நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சியுடன் நிறைவடைய உள்ளது. மூன்று நாள் விசெனியல் விழாவின் நிறைவாக, 10 அக்டோபர் 2026 அன்று மைல்கல் முன்னாள் மாணவர் சந்திப்பு (Milestone Alumni Meet) நடைபெற உள்ளது.செவிலியர் கல்லூரியின் பல்வேறு ஆண்டு மாணவர் குழுக்களைச் சேர்ந்த சுமார் 150 முன்னாள் மாணவர்கள், தற்போது இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மருத்துவ சேவை, கல்வி மற்றும் தலைமைப் பொறுப்புகளில் பணியாற்றி வருபவர்கள், ஜிப்மர் வளாகத்திற்கு வருகை தந்து தங்களது முன்னாள் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைச் சந்தித்து, கல்லூரியின் 20 ஆண்டுகாலப் பயணத்தைக் கொண்டாட உள்ளனர்.
முன்னாள் மாணவர் சந்திப்பில் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன. ஜிப்மர் செவிலியர் கல்லூரியின் 20 ஆண்டுகாலப் பயணம், கல்விச் சிறப்பு, தொழில்முறை மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் சேவைக்கான அதன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிப்பதுடன், அறிவு, புத்தாக்கம் மற்றும் ஆதார அடிப்படையிலான சுகாதாரப் பராமரிப்பு மூலம் செவிலியத் துறையின் எதிர்காலத்தை உருவாக்கும் .
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.