Times of Puducherry

வாடகை வீடு கேட்பது போல் நடித்து 7 பவுன் சங்கிலி பறிப்பு – 22 மணி நேரத்தில் நகையை மீட்ட லால்குடி காவல்துறைக்கு குவியும் பாராட்டு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
8 Oct 2026 • 3:47 PM
chain-snatching-recovered-by-lalgudi-police-trichy

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாடகை வீடு கேட்பது போல நடித்து, முதியவரிடம் 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற பெண்ணை, புகாரளிக்கப்பட்ட 22 மணி நேரத்திற்குள் லால்குடி காவல் நிலைய போலீசார் அதிரடியாகக் கைது செய்து நகையையும் மீட்டனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த வசந்தம் நகரைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர் கோத்தாரி சுகர்ஸ் ஆலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று நாகராஜனும் அவரது மனைவி சம்பூர்ணமும் வீட்டில் இருந்தபோது, பெண் ஒருவர் வீடு வாடகைக்கு கேட்பது போல அங்கு வந்துள்ளார். அவர்களிடம் பேச்சுக்கொடுத்துக் கொண்டிருந்த அந்தப் பெண், திடீரெனக் குடிக்கத் தண்ணீர் கேட்டுள்ளார். வீட்டிலிருந்தவர்கள் தண்ணீர் எடுக்கச் சென்ற நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, நாகராஜன் மற்றும் சம்பூர்ணத்தை அச்சுறுத்தி, கழுத்தில் இருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடினார். முதியவரான நாகராஜன் அந்தப் பெண்ணைப் பிடிக்கப் பின்தொடர்ந்து ஓடியபோது, எதிர்பாராதவிதமாகக் கீழே விழுந்ததில் அவருக்குக் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

வாடகை வீடு கேட்பது போல் நடித்து 7 பவுன் சங்கிலி பறிப்பு – 22 மணி நேரத்தில் நகையை மீட்ட லால்குடி காவல்துறைக்கு குவியும் பாராட்டு

இச்சம்பவம் குறித்து லால்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடனடியாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்குத் தகவல் தெரிவித்தனர். மாவட்டக் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா மோகன் உத்தரவின் பேரில், லால்குடி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் சித்ரன், தலைமை காவலர் சரவணகுமார் மற்றும் காவலர்கள் ராம்குமார், புண்ணியமூர்த்தி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை காவல்துறையினர் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில், லால்குடி அருகே உள்ள மேலவளையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மனைவி உமாமகேஸ்வரி தான் இந்தத் துணிகரக் கொள்ளையில் ஈடுபட்டது உறுதியானது. உடனடியாகச் செயல்பட்ட தனிப்படையினர், உமாமகேஸ்வரியைக் கைது செய்து தீவிர விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 7 பவுன் தங்கச் சங்கிலியையும் மீட்டனர். புகார் அளிக்கப்பட்ட 22 மணி நேரத்திற்குள் குற்றவாளியைக் கண்டுபிடித்து நகையை மீட்ட லால்குடி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் சக காவலர்களின் இந்தச் சிறப்பான நடவடிக்கையை உயர் அதிகாரிகளும், அப்பகுதி பொதுமக்களும் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top