Times of Puducherry

"தேவதாசி - தேவநாயகி: எதிரும் புதிரும்" - பேராசிரியர் இள. சாலினி பேச்சு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
8 Oct 2026 • 6:57 PM
devadasi-system-Loyola-college-salini-speech

“தேவதாசி – தேவநாயகி – எதிரும் புதிரும்” என்னும் தலைப்பில், புதுச்சேரியில் நடைபெற்றக் கருத்தரங்கிற்கு, இலயோலாக் கல்லூரி, புள்ளியியல் துறைத் துணைப் பேராசிரியர் முனைவர் இள. சாலினி தலைமை தாங்கி பேசியதாவது:

‘தேவரடியார்’ முறை என்பது ஓர் அடக்குமுறை. ஓர் ஆதிக்க முறையின் வெளிப்பாடு. எட்டு அல்லது ஒன்பது வயதுக்குள்ளான சிறுமிகளைக் கோயிலுக்குப் பொட்டுக் கட்டும் நடைமுறையில், அவர்கள் மீது தங்கள் அடக்குமுறையைக் காட்டுவது, அவர்களை அடிமையாக வைத்திருப்பது, அவர்களைக் கொடுமைப்படுத்துவது, அக்குழந்தைகளைக் கோயிலுக்குக் கோயில் மாற்றுவது, தப்பித்துப் போக நினைக்கும் குழந்தைகளுக்கு மிகப்பெரிய தண்டனை வழங்குவது என்று சொல்ல முடியாத கொடுமைகளை அனுபவித்து உள்ளனர் அந்தச் சிறுமிகள்.

இதற்கு, இந்தியாவை அப்போது ஆண்டு கொண்டிருந்த விக்டோரியா மகாராணி உட்பட எந்தத் தலைவர்களும் எதிர்ப்போ அல்லது மறுப்போ கூடத் தெரிவிக்கவில்லை. ஏனெனில், இந்த நடைமுறைக்குப் பின்னால் மதம் இருக்கிறது; மதத்துக்குப் பின்னால் ஒரு கடவுள் இருக்கிறார். But as an atheist, we know that there are some human mentalities behind the concept of god.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, தன் பணியில் தேவதாசிப் பெண்களுக்கு மருத்துவம் பார்க்கும் போது, அந்தப் பெண்கள் பால்வினை நோய்க்காளாகி, சீர்கேடான உடல்நிலையோடு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். பெண் சமூகம் ஏன் இத்தனை மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது என்ற ஆதங்கத்துடன், 1929-ஆம் ஆண்டு பிப்ரவரி இரண்டாம் நாள், சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் முத்துலட்சுமி, சென்னை மாகாணச் சட்டமன்றத்தில், தேவதாசி ஒழிப்புச் சட்ட மசோதாவை முன் மொழிகிறார்.

​அதற்கு மிகப்பெரிய எதிர்ப்பைத் தெரிவித்ததவர், அப்போதிருந்த சட்டமன்ற உறுப்பினர் சத்தியமூர்த்தி என்னும் பார்ப்பனர். “இந்தத் தேவதாசி ஒழிப்பு முறைச் சட்டத்தைக் கொண்டு வந்தால் பரதநாட்டியக் கலை உட்பட மற்றெல்லாக் கலைகளும் அழிந்துவிடும். அதனால் அந்த நடைமுறை தொடர வேண்டும், எல்லாம் ஆண்டவன் செயல்” என்றார் சத்தியமூர்த்தி. கடவுள் படைப்பில் எல்லாம் சமமாகத்தானே இருக்க வேண்டும்? கடவுள் படைப்பில் ஆண் எதற்கு, பெண் எதற்கு? முதலாளி எதற்கு, தொழிலாளி எதற்கு? பார்ப்பான் எதற்கு, பறையன் எதற்கு? கடவுள் எல்லாவற்றையுமே சமமாகப் படைத்திருக்கலாமே? கடவுள் சிலைகளை வெளிநாடுகளுக்குக் கடத்துகிறார்கள். இது எவனுடைய செயல் என்று யார் சொல்வது? “இந்தப் பொட்டுக் கட்டும் முறையில் ஒரு சில குலத்துப் பெண்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அனுப்புகிறீர்கள், ஏன் உங்கள் குலத்துப் பெண்களை அனுப்புவதில்லை?” என்றெல்லாம் டாக்டர் முத்துலட்சுமி வாதாடிய நிலையில், 1947 ஆம் ஆண்டில், ஓமந்தூர் ராமசாமி முதல்வராக இருந்த போதுதான், தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப் பட்டது.

சரி, இதற்கு மேல் தேவதாசிகள் திருமணம் செய்து கொள்ளலாம், அவர்களுடைய வாழ்க்கை முறையை அவர்களாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்ற நிலையைச் சட்டரீதியாக ஏற்படுத்துகிறார்கள். ஓர் உயிருக்கு, அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி எல்லா உரிமையும் உண்டு. இதை யாராலுமே தடுக்க முடியாது, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது பகுத்தறிவுள்ள ஒரு மனிதன் எழுதி வைத்தது. எழுத்து வடிவில் இதெல்லாம் சொல்லும் போது, கடவுள் படைப்பில் எல்லாமே சமமாகத்தான் இருக்க வேண்டும். இந்த மாதிரி ஒரு குலத்துக்கு இவ்வளவு பெரிய தீங்கு இழைக்கக்கூடிய ஒரு செயல்முறை வந்திருந்திருக்கக் கூடாது; அதை நடைமுறைப்படுத்தி இருக்கக் கூடாது. காலந்தாழ்த்தி யாயினும் தேவதாசி ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வந்த அனைவர்க்கும் என்னுடைய நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முனைவர் இள. சாலினி பேசினார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top