Times of Puducherry

ஸ்மார்ட் மீட்டர்; மின் கட்டணம் எகிறும் அபாயம்; மின்வாரிய அலுவலகம் முன்பு சிஐடியு ஒலி முழக்கப் போராட்டம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
8 Oct 2026 • 6:25 PM
smart-meter-installation-condemns-citu-trichy

​தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 12 மண்டலங்களிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு தற்போதைய அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது. கடந்த காலத்தில் ஸ்மார்ட் மீட்டர் நிறுவுவதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டபோது அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. தற்போதைய அரசும் முதலில் “ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படாது” என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

​ஆனால், மத்திய அரசின் அழுத்தத்தின் காரணமாக த.வெ.க அரசு தற்போது தமிழ்நாடு மின்வாரியத்தில் 70 சதவீத மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு மீண்டும் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இதன் மூலமாக தனியார் நிறுவனங்கள் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அனுமதிக்கப்படுவார்கள், பொதுத்துறை மின்வாரியம் தனியார்மயமாக்கப்படும். இதனால் மின்கட்டணம் கடுமையாக உயர்வதுடன், மின் மானியங்களும் ரத்தாகும் அபாயம் உள்ளது.

​எனவே, பொதுமக்களைப் பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, இன்று சிஐடியு சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மின்வாரியப் பிரிவு அலுவலகங்கள் முன்பு ஒலி முழக்கப் போராட்டம் நடைபெற்றது.
​
இதன் ஒரு பகுதியாக, திருச்சி தென்னூரில் உள்ள மின்வாரியத் தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு வட்டச் செயலாளர் பழனியாண்டி தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் துணைத்தலைவர் ரெங்கராஜன், கோட்டத் தலைவர் மணிகண்டன், கோட்டச் செயலாளர் ராதா, நிர்வாகிகள் ஜான் போஸ்கோ ரவி, முகமது இப்ராஹிம் மற்றும் மின்துறை பொறியாளர் அமைப்பின் மாநிலத் துணைச் செயலாளர் இருதயராஜ் ஆகியோர் பேசினர்.
​
இப்போராட்டத்தில் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனக் கோஷங்களை எழுப்பினர். இதேபோன்று லால்குடி, ஸ்ரீரங்கம், மன்னார்புரம், கே.கே.நகர், கைலாசபுரம், அரியமங்கலம், துறையூர், மணப்பாறை உட்பட 20க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தின் இறுதியில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் அனைத்து தொழிற்சங்களையும் இணைந்து இந்த மாத இறுதியில் ​வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top