Times of Puducherry

சமயபுரம் போராட்ட களத்திற்கு வந்த விவசாயிகள் குண்டு கட்டாக கைது

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
22 Oct 2026 • 5:21 PM
waive-loan-completely-samayapuram-farmers-protest

விவசாயக் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சி சமயபுரத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற 4 பெண்கள் உட்பட 252 பேரை காவல்துறையினர் குண்டுகட்டாகத் தூக்கி சென்று கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் பெற்ற பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் கடந்த செப்.15-ம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டம் தொடங்கியது. தொடர்ந்து 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம், அமைச்சர்கள் ரமேஷ், வினோத், காந்திராஜன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இடைத்தேர்தல் நடைபெறுவதால் பயிர்க் கடன் தள்ளுபடி தொடர்பாக முடிவு எடுக்க 20 நாள் கால அவகாசம் தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர். அமைச்சர்கள் அறிவித்த காலக்கெடுவிற்கு மேல் ஒரு மாதமாகியும் பயிர்க் கடன் தள்ளுபடி தொடர்பாக எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.

சமயபுரம் போராட்ட களத்திற்கு வந்த விவசாயிகள் குண்டு கட்டாக கைது

இதையடுத்து இன்று முதல் சமயபுரம் சக்தி நகரில் உள்ள பனைத்தோப்பில் 50-க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர். போராட்டத்தை முறியடிக்கும் விதமாக களமிறங்கிய காவல்துறை, திருச்சி மாவட்ட எல்லைகளில் உள்ள சமயபுரம் சுங்கச்சாவடி, சமயபுரம் நால்ரோடு பகுதி, நம்பர் ஒன் டோல்கேட் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் 600-க்கும் மேற்பட்ட போலீஸாரை குவித்து அங்கு வரும் வாகனங்கள் அனைத்தையும் தணிக்கை செய்தனர்.

குறிப்பாக சமயபுரம் நால்ரோடு பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். இறுதியாக, சமயபுரத்தை அடுத்த இருங்களூர் எஸ் ஆர் எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே விவசாயிகள் திரள துவங்கினர். அதனைக் கண்டறிந்த போலீஸார் அவர்களை அங்கு சுற்றி வளைத்தனர்.

விவசாயிகளை கைது செய்ய முற்பட்டபோது இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனாலும் முயற்சியை கைவிடாத போலீஸார் விவசாயிகளை வலுக்கட்டாயமாகவும், குண்டுக்கட்டாகவும் தூக்கி வேனில் ஏற்றி கைது செய்தனர். மொத்தம் 4 பெண்கள் உட்பட 252 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரும் சமயபுரத்தில் 3 இடங்களில் உள்ள திருமண மண்டபங்களில் தனித்தனியாக அடைத்து வைக்கப்பட்டனர். சமயபுரத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் திரண்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top