Times of Puducherry
தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,041வது சதய விழா மங்கள இசையுடன் தொடங்கியது.
பட்டிமன்றம், கவியரங்கம், நாட்டியாஞ்சலி என பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நேற்றும், இன்றும் இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் இராஜராஜ சோழன் பிறந்த மற்றும் அரியணையில் ஏறிய ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தை ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் மாமன்னன் இராஜராஜ சோழனின் 1,041வது சதய விழா அரசு விழாவாக இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
இந்த விழாவை முன்னிட்டு அரண்மனை வளாகத்தில் இருந்து குதிரைகள் பூட்டிய ரதத்தில் நூற்றுக்கணக்கான நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சியோடு முக்கிய வீதிகள் வழியாக நகர்வலம் நடைபெற்றது.
மேலும், தஞ்சாவூரில் ராஜராஜ சோழனின் 1041-ஆவது சதயவிழாவையொட்டி, 1041 நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்ற பிரமாண்ட நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. பெருவுடையார் கோயிலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஒரே நேரத்தில் ஆயிரத்து 41 பரத கலைஞர்கள் அபிநயம் பிடித்து நாட்டியாஞ்சலி செலுத்தியதை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
இரண்டாம் நாளான இன்று காலை அரசு சார்பில் தஞ்சை பெரிய கோயில் அருகே உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்னர் தமிழ் ஆர்வலர்கள் பிற அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அதனை தொடர்ந்து பெருவுடையாருக்கு 48 வகையான திரவியங்களால் பேராபிஷேகம் நடைபெற்றது.
சதய விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் விஜய் சரவணன், சதய விழாக் குழுத் தலைவர் சரவணன், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, சதய விழாக் குழுத் துணைத் தலைவர் சங்கர் ராமன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் செய்திருந்தனர். சதயவிழாவை முன்னிட்டு இன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.