Times of Puducherry
வீராணம் ஏரியில் தண்ணீர் இருந்தும் பயிர்களுக்கு இல்லை; பல ஆயிரம் ஏக்கர் நேரடி நெற்பயிர்கள் கருகும் அபாயம்;கத்தி பட பாணியில் ஏரியில் இறங்கி விவசாயிகள் போராட்டம்; போலீசார் குவிப்பு – சார் ஆட்சியர் பேச்சுவார்த்தை!
கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் வீராணம் ஏரி பாசனத்தை நம்பி சம்பா பருவத்திற்காக பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளது.
போதிய மழை பெய்யாத நிலையில், வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்கு போதிய அளவு தண்ணீர் திறக்கப்படாததால், முளைத்துள்ள நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
தற்போது வீராணம் ஏரிக்கு விநாடிக்கு சுமார் 300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதாகவும், அதிலிருந்து சென்னை குடிநீர் தேவைக்காக தினமும் 73 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாசனத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். குடிநீர் தேவைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டி, தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் வீராணம் ஏரியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீராணம் ஏரியில் தேங்கியிருந்த தண்ணீருக்குள் விவசாயிகள் இறங்கி நின்று, தங்களது நெற்பயிர்களை காப்பாற்ற உடனடியாக பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கோஷமிட்டனர். மேலும், தண்ணீர் திறக்காவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என எச்சரித்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காததால் பம்புசெட் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகிறோம். இதனால் கூடுதல் செலவு ஏற்படுவதுடன், பல இடங்களில் போதுமான அளவு தண்ணீரும் கிடைக்கவில்லை. சம்பா சாகுபடிக்காக ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். தற்போது தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே கடன் வாங்கி சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளனர்.
பயிர்கள் முழுமையாக கருகிவிட்டால் எங்களது வாழ்வாதாரமே பாதிக்கப்படும். எனவே வீராணம் ஏரி மற்றும் பாசன வாய்க்கால்களில் இருந்து விவசாய தேவைக்கேற்ப உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்” என்றனர். மேலும், பாசனத்துக்கு தேவையான தண்ணீரை உடனடியாக திறக்க வேண்டும். இல்லையெனில் வறட்சியால் பாதிக்கப்பட்டதாக கருதி, ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். விவசாயிகள் ஏரியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ராமலிங்கம், காவல் ஆய்வாளர் பாபு தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சார் ஆட்சியர் சுபதர்ஷினி, பொதுப்பணி துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும் கருகிய வயல்களின் புகைப்டங்களை காண்பித்து விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து வருகின்றனர் இதனால் வீராணம் ஏரி பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.