Times of Puducherry

"ஊழலை ஒழிப்போம்" என்ற முழக்கம் வெறும் காகிதலும், அறிக்கைகளிலும் மட்டும் சுருங்கிவிட கூடாது - வேல்முருகன்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
5 Oct 2026 • 5:30 PM
anti-corruption-velmurugan

ஊழல் மூலம் சேர்க்கப்பட்ட சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்கான சட்ட நடைமுறையை வலுப்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் கருத்தைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழுமனதுடன் வரவேற்கிறது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

ஊழல் என்பது தனிநபர் செய்யும் குற்றம் மட்டுமல்ல. அது மக்களின் வரிப்பணத்தையும், அரசின் வளங்களையும், பொதுநலத் திட்டங்களையும் கடுமையாகப் பாதிக்கும் பெருங்குற்றமாகும். எனவே, லஞ்சம் பெற்றுச் சொத்துகளைக் குவித்துவிட்டு, சட்ட நடைமுறைச் சிக்கல்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அவற்றை அனுபவித்து வரும் ஊழல் லஞ்சப் பெருச்சாளிகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஊழல் மூலம் பெறப்பட்டதாகக் கருதப்படும் சொத்துகளை முடக்குவதை வலுப்படுத்தவும், அதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இது வெறும் கருத்தாகக் கடந்து செல்லாமல், வலுவான சட்டரீதியான நடவடிக்கையாக மாற வேண்டும்.

ஊழல் தடுப்புச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை ஒன்றிய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். ஊழல் மூலம் சட்டவிரோதமாகச் சேர்க்கப்பட்ட சொத்துகளைச் சட்ட நடைமுறைக்கு உட்பட்டு முடக்கி, குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னர் அரசுடைமையாக்குவதற்கும், பறிமுதல் செய்வதற்கும், தெளிவான, வலிமையான சட்ட ஏற்பாட்டை உருவாக்க வேண்டும். ஊழல் வழக்குகள் ஆண்டுக்கணக்கில் இழுபறியாகாமல், விசாரணையும் நீதிமன்ற நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் விரைந்து நடைபெற வேண்டும். தமிழக அரசும் தனது அதிகார வரம்பிற்குள் உள்ள துறைசார் நடவடிக்கைகள் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைகளில் எவ்விதத் தாமதத்திற்கும் இடமளிக்கக் கூடாது.

ஊழல் செய்துவிட்டு வெறுமனே சிறைத் தண்டனையை மட்டும் அனுபவிப்பது போதாது. ஊழல் மூலம் அடைந்த சட்டவிரோதப் பொருளாதாரப் பலன்கள் அனைத்தையும் அவர்கள் முழுமையாக இழக்க வேண்டும். மக்களின் வரிப்பணத்தைச் சூறையாடிச் சொத்துக் குவிப்பவர்களுக்கு அவர்கள் வகிக்கும் பதவியோ, சட்டப் பாதுகாப்போ அரணாக இருக்கக் கூடாது. ஊழல் மூலம் சேர்த்த சொத்துகளும் எக்காரணத்தைக் கொண்டும் பாதுகாக்கப்படக் கூடாது.

“ஊழலை ஒழிப்போம்” என்ற முழக்கம் வெறும் காகித அளவிலும் அறிக்கைகளிலும் மட்டும் சுருங்கிவிடாமல், சட்டமும் நடவடிக்கைகளும் அதற்கேற்பக் கடுமையானதாக அமைய வேண்டும். நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள இந்த இன்றியமையாத சட்டத் தேவையை ஒன்றிய அரசும், தமிழக அரசும் உடனடியாகக் கவனத்தில் கொண்டு உரிய உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top