Times of Puducherry

SIR இல் குழப்பம் இன்று வரை நீங்காத நிலையில், SSRஎதற்கு?- வேல்முருகன் கேள்வி

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
22 Oct 2026 • 6:19 PM
still-problem-with-sir-why-ssr-velmurugan-questions

வாக்குரிமைக்காக வாழ்வாதாரத்தை விட்டுவிட்டு, மக்கள் நாள்தோறும் அலைகின்றனர் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியை தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார் இதை குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்:

வாக்காளர் பட்டியலைச் சீரமைப்பதாகக் கூறி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த SIR நடவடிக்கையில், தமிழ்நாட்டின் இறுதிப் பட்டியலில் சுமார் 70 லட்சம் வாக்காளர் பதிவுகள் நீக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டைப் பதிவுகள் உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் பதிவுகள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால், SIR நடவடிக்கையில் எழுந்த அனைத்து கேள்விகளுக்கும் முழுமையான பதில் கிடைத்துவிட்டதா? தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் தவறுதலாக நீக்கப்படவில்லை என்பதற்கான உறுதி என்ன?

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக அதன் உள்ளேயே ஆட்சேபனைகள் எழுந்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அவர்கள் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அதன் வெளிப்படைத்தன்மை மற்றும் சுயாதீனம் குறித்த கேள்விகளுக்கு ஆணையம் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டாமா?

SSR மூலம் புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், விவரங்களைத் திருத்துதல், தகுதியற்ற பதிவுகளை உரிய நடைமுறையில் நீக்குதல் போன்ற பணிகள் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அப்படியானால், SIR-ல் பெயர் விடுபட்ட தகுதியான வாக்காளர்கள் அனைவரும் SSR மூலம் எந்தத் தடையும் இன்றி மீண்டும் பட்டியலில் இடம்பெறுவார்கள் என்பதற்கான உத்தரவாதம் என்ன?

தவறான நீக்கம், தொழில்நுட்பப் பிழை அல்லது தரவுப் பொருத்தப் பிழையால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அதைச் சரிசெய்வதற்கான எளிய நடைமுறை என்ன? அந்தத் தவறுக்கு பொறுப்பேற்பது யார்?

ஒரு தொழிலாளி, விவசாயி, கூலித் தொழிலாளி, சிறு வணிகர் அல்லது நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் தனது வாழ்வாதாரத்திற்காக உழைக்க வேண்டுமா? அல்லது ஒவ்வொரு புதிய நடைமுறைக்காகவும் ஆவணங்களைத் தூக்கிக்கொண்டு அலுவலகம் அலுவலகமாக அலைய வேண்டுமா? அரசின் நடைமுறைகள் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்காக இருக்க வேண்டும். மக்களின் நேரத்தையும் உழைப்பையும் பறிப்பதற்காக அல்ல.

தேர்தல் ஆணையத்தின் சுயாதீனம் குறித்து அரசியல் தரப்புகளில் கேள்விகள் எழும் நிலையில், அதன் ஒவ்வொரு முக்கிய நடவடிக்கைக்கும் காரணம், நடைமுறை, பொறுப்பு ஆகியவற்றை வெளிப்படையாக விளக்க வேண்டிய கடமை ஆணையத்திற்கு உள்ளது. ஒன்றிய அரசின் செல்வாக்கு அல்லது தலையீடு இருப்பதாக அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை உறுதி செய்ய ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.

அதேபோல், தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் மாநில அரசு நேரடியாக தலையிட முடியாது என்றாலும், தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமை பாதிக்கப்படாமல் இருக்க சட்டரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு இல்லையா? மக்களின் வாக்குரிமை அரசின் கருணையால் வழங்கப்படும் சலுகை அல்ல. அது அரசியலமைப்பு வழங்கிய உரிமை.

எனவே, தேர்தல் ஆணையமும் ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் ஒரு விஷயத்தில் தெளிவான உறுதியை வழங்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top