Times of Puducherry

தூய்மை பணியாளர்களுக்கு சம்பள உயர்வு அறிவித்த முதல்வர் அதனை செயல்படுத்த தவறியது ஏன் - சிவா கேள்வி

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
27 Oct 2026 • 7:42 PM
salary-hike-announcement-made-but-why-they-didnt-implement-questions-siva

ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்டு ஆட்சிக்கு தலைமை ஏற்றுள்ள முதல்வர் ரங்கசாமி மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப பிறப்பிக்கும் எந்த ஆணையும் புதுச்சேரி நிர்வாகத்தால் புறந்தள்ளப்படுவது வாடிக்கையாகி விட்டது. இரட்டை என்ஜின் ஆட்சி என்பது புதுச்சேரியில் இரட்டைத் தலைமை ஆட்சியாக மாறி மக்கள் நலனை புறம்தள்ளி வருவது தொடர் கதையாகி வருகிறது.

அதன் நீட்சியாக சென்ற மாதம் புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்ற தூய்மைப் பணி மாநாட்டில் துணைநிலை ஆளுநர் முன்னிலையில் உரையாற்றிய நமது முதல்வர் ஜூன் மாதம் முதல் தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்தார்.

அந்த சம்பள உயர்வு நான்கு மாதம் கடந்த நிலையில் புதுச்சேரி நகர் பகுதியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு தவிர வேறு எந்த பகுதியில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் சென்று சேரவில்லை. புதுச்சேரி பகுதியில் 5 கொம்யூன் பஞ்சாயத்துக்கள், காரைக்கால் நகரம் மற்றும் 5 கொம்யூன் பஞ்சாயத்துக்கள், மாஹே, ஏனாம் பகுதிகள் எங்கும் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் நான்கு மாதங்களாக எதிர்பார்த்து இருந்த சம்பள உயர்வு இன்று வரை கிடைக்கவில்லை. சென்ற மே மாதம் உள்ளாட்சித் துறை அரசு ஆணை மூலம் இந்த சம்பள உயர்வுக்கு அறிவிப்புச் செய்தும் அதனை நிறைவேற்ற அரசு தயங்குவது ஏன்?.

அத்துடன் மாதம், மாதம் தூய்மைப் பணிக்கான நிதி காலத்தோடு ஒப்பந்ததாரர்களுக்கு சென்றடைவதில்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து கொண்டுள்ளது. அதனால் மாத சம்பளம் வழங்குவதும் தாமதமாகிவருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொழிலாளர்கள் போனசை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அரசு நிதி அளிக்காததால் போனஸ் கிடைக்குமா என்ற சந்தேகம் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டு இருக்கிறது. கடைநிலை ஊழியர்களாக துப்புரவு பணியை மேற்கொண்டு வரும் இந்த தொழிலாளர்களுக்கான நிதி காலத்தோடு அரசு வழங்காமல் தட்டிக்கழிப்பதின் காரணம் என்ன?.

பெருகிவரும் சுற்றுலா வளர்ச்சியின் காரணமாக தூய்மைப் பணி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதுச்சேரியை சுத்தமாக வைத்திருக்க தொழிலாளர்கள் இரவு, பகலாக தங்கள் கடின உழைப்பை நல்கி வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கான நிதியை காலத்தோடு அளிக்காமலும், உயர்த்திய சம்பளத்தை அனைவருக்கும் கொடுக்காமல் அரசு மெத்தனம் காட்டுவது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

முதலமைச்சர் அறிவிக்கின்ற பல்வேறு திட்டங்கள் கிடப்பில் கிடப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவ்வாறின்றி தூய்மைப் பணியாளர்களுக்கு அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தனி கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்வரை மாநில திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top