Times of Puducherry

தீபாவளி நெருங்கும் நேரத்தில் ஆவின் பொருட்களின் விலையேற்றம் ஏன்? - வேல்முருகன்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
27 Oct 2026 • 7:03 PM
price-raise-of-aavin-products-during-diwali-season-affects-middle-class

நடுத்தர, ஏழை எளிய மக்கள் வாழவே முடியாத சூழ்நிலைக்கு தள்ளுவது யார்? ஏன்னா தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஏற்கனவே அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து, ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மாதச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வருமானம் உயராத நிலையில், அன்றாடத் தேவைகளுக்கான செலவுகள் மட்டும் அதிகரிப்பது குடும்பங்களின் பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்துகிறது.

தமிழ்நாடு ஆட்சியாளர்களின் மோசமான நிர்வாகத்தால் ஒருபுறம், தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்கள் நிரந்தரப் பணி, பணிப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகின்றனர். மறுபுறம், தங்களது வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டோ ஓட்டுநர்கள், கால் டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் வாடகை வாகன ஓட்டுநர்கள் போராடி வருகின்றனர்.

இவ்வாறு மக்கள் தங்களது குடும்பங்களின் அன்றாடச் செலவுகளை சமாளிக்க போராடிக் கொண்டிருக்கும்போது, தீபாவளி நெருங்கி வரும் நேரத்தில் நெய், வெண்ணெய், இனிப்புகள், தயிர் உள்ளிட்ட 67 ஆவின் பொருட்களின் விலையை உயர்த்துவது ஏன்?

மக்களின் வருமானம் குறைந்து, செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், இந்த விலையேற்றம் அண்ணன் சீரா? தாய்மாமன் சீரா? என்று கேட்கும் அளவுக்கு மக்களின் மீது அடுத்தடுத்து சுமைகளை ஏற்றுவது ஏன்?

ஆவின் என்பது மக்களின் அன்றாட வாழ்க்கையோடு நேரடியாக தொடர்புடைய கூட்டுறவு நிறுவனம். மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்களின் விலையை உயர்த்துவதற்கு முன்பாக, பொதுமக்களின் வாங்கும் திறன் மற்றும் தற்போதைய பொருளாதார நிலையை அரசு கருத்தில் கொண்டிருக்க வேண்டாமா?

மகிழ்ச்சிக்காக மக்கள் காத்திருக்கும் நேரத்தில், அவர்களின் பைகளில் இருந்து கூடுதல் பணத்தைப் பிடுங்கும் வகையில் விலை உயர்வு அறிவிப்பது எந்த வகையில் மக்கள் நலன் சார்ந்த நிர்வாகமாக இருக்க முடியும்?

ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் சிரமப்படும் குடும்பங்களின் மீது மேலும் ஒரு சுமையை ஏற்றாமல், 67 ஆவின் பொருட்களின் விலை உயர்வை தமிழ்நாடு அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும்.

மக்களின் வருமானத்தைப் பாதுகாப்பதுடன், அத்தியாவசியப் பொருட்கள் நியாயமான விலையில் கிடைப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top