Times of Puducherry

காவல்துறையில் 15 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டும் - வேல்முருகன் கோரிக்கை

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
5 Oct 2026 • 2:49 PM
police-vacancies-appointments

தமிழ்நாட்டில் காவல்துறையில், சுமார் 15,000 பணியிடங்கள் காலியாகக் கிடக்கின்றன. காவல்துறையில் அனுமதிக்கப்பட்ட 1,34,667 பணியிடங்களில், 1,18,851 பேர் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர். மறுபுறம், தேர்வுகளை முடித்துவிட்டுப் பணி நியமன ஆணைக்காக ஆயிரக்கணக்கான தகுதியான இளைஞர்கள் காத்திருக்கின்றனர். காவல்துறையில் 15 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிக்கப்பட்ட 3,644 பணியிடங்களுக்கான (2,833 இரண்டாம் நிலைக் காவலர்கள், 180 சிறைக் காவலர்கள், 631 தீயணைப்பாளர்கள்) எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வுகள் முடிவடைந்துவிட்டன. ஆனால், உயரம் அளவீடு தொடர்பான வழக்குகள் மற்றும் தமிழ்வழிக் கல்வி (PSTMS) இடஒதுக்கீடு வழக்குகளைக் காரணம் காட்டி, உதவி ஆய்வாளர் உள்ளிட்ட அடுத்தகட்ட பணி நியமனங்கள் காலவரையின்றி முடங்கியுள்ளன.

நீதிமன்ற வழக்குகளைத் திறம்படக் கையாண்டு விரைந்து தீர்வு காண்பது அரசின் கடமை. வழக்குகள் முடியும்வரை தேர்வர்களின் வயது நின்றுவிடப் போவதில்லை. குடும்பச் சூழலும் வறுமையும் காத்திருக்கப் போவதில்லை. காவல்துறையில் பணியாளர் பற்றாக்குறை நிலவுவதால், பணியில் உள்ள காவலர்கள் கடுமையான மன உளைச்சலுக்கும் கூடுதல் பணிச்சுமைக்கும் ஆளாகின்றனர்.

ரோந்து, பாதுகாப்பு, குற்றப்புலனாய்வு, நீதிமன்றப் பணிகள் என ஒரு காவலரே இரண்டு பேரின் பணிகளைச் சுமக்க வேண்டிய அவலநிலை நீடிக்கிறது. ஓய்வுபெறும் காவலர்களின் எண்ணிக்கையை முன்கூட்டியே திட்டமிட்டு, காலியிடங்கள் உருவாவதற்கு முன்பே ஆட்சேர்ப்புப் பணிகளைத் தொடங்குவதுதானே தொலைநோக்குள்ள நிர்வாகத்திற்கு அழகு? தற்போதைய ஆட்சி நிர்வாகத்தின் அணுகுமுறை திட்டமிடல் தோல்வியையே காட்டுகிறது. காவல்துறைப் பணியிடங்களை முழுமையாக நிரப்பாமல் இழுத்தடிப்பதற்குப் பொறுப்பு யார்? தேர்ச்சி பெற்ற இளைஞர்களின் பணி நியமனத்தை முடக்கியுள்ள சட்டச் சிக்கல்களுக்கு அரசு கண்ட தீர்வு என்ன?
ஓய்வுபெறும் எண்ணிக்கையைக் கணக்கில்கொண்டு உடனுக்குடன் ஆட்சேர்ப்பு நடத்தத் தொடர் திட்டம் இல்லையா? காவலர்களின் பணிச்சுமையைக் குறைத்து, குற்றத்தடுப்புப் பிரிவை வலுப்படுத்த உடனடி நடவடிக்கை என்ன?.

சாக்குப் போக்குகளைக் கைவிட்டு, சட்டச் சிக்கல்களுக்கு விரைந்து தீர்வு கண்டு, தகுதிபெற்ற இளைஞர்களுக்குத் தாமதமின்றிப் பணி நியமன ஆணை வழங்க வேண்டும். இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதும், காவலர்களைப் பணிச்சுமையில் வாடவிடுவதும் மக்கள் பாதுகாப்பைப் பலவீனப்படுத்தும். எனவே, தமிழ்நாடு அரசு வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து, காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வழிவகை செய்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top