Times of Puducherry

ரூ.53,000 முதலீடு; 25 வருஷத்துக்கு இலவச கரண்ட்! பிரதமர் சூர்யா கர் திட்டத்தின் 'மாஸ்' கணக்கு

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
2 Oct 2026 • 10:26 PM
pm surya ghar yojanas massive numbers

மாதந்தோறும் எகிறும் மின்சாரக் கட்டணத்தில் இருந்து தப்பிக்கவும், சொந்தமாக மின்சாரம் தயாரித்துக் கொள்ளவும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மிக முக்கியமான திட்டம் தான் ‘பிரதம மந்திரி சூர்யா கர் முஃப்த் பிஜிலி யோஜனா’ (PM Surya Ghar Muft Bijli Yojana).

அரசு வழங்கும் பெருமளவு மானிய உதவியோடு உங்கள் வீட்டின் மொட்டை மாடியில் சோலார் பேனல்களை நிறுவ முடியும். இதில் 1 கிலோவாட் (1 kW) திறன் கொண்ட சோலார் சிஸ்டம் அமைக்க எவ்வளவு செலவாகும்? எவ்வளவு கரண்ட் பில் மிச்சமாகும்? என்பது குறித்து பார்க்கலாம்.

1 கிலோவாட் சோலார் சிஸ்டம் யாருக்குப் போதும்?

1 கிலோவாட் சோலார் அமைப்பு என்பது சிறிய குடும்பங்களுக்கும், 1 அல்லது 2 படுக்கையறைகள் கொண்ட வீடுகளுக்கும் மிகச் சரியானது. 3 முதல் 4 எல்.இ.டி பல்புகள், 2 முதல் 3 ஃபேன், ஒரு டிவி, வைஃபை ரூட்டர் மற்றும் மொபைல்/ லேப்டாப் சார்ஜர்கள் போன்றவற்றைத் தடங்கலின்றி இயக்கலாம். ஏசி (AC), வாட்டர் ஹீட்டர் (Geyser), கிரைண்டர் போன்ற அதிக பவர் இழுக்கும் சாதனங்களை 1 கிலோ வாட் அமைப்பில் இயக்க முடியாது. அதற்கு கூடுதல் திறன் தேவை.

செலவு மற்றும் மத்திய அரசின் மானியம்

சோலார் சிஸ்டத்தின் செலவு அது ஆன்-கிரிட் (On-Grid – பேட்டரி இல்லாதது) அல்லது ஆஃப்-கிரிட்/ ஹைப்ரிட் (Off-Grid – பேட்டரி கொண்டது) என்பதைப் பொறுத்து மாறுபடும். பேட்டரி இல்லாத அமைப்புக்குச் செலவு குறைவு. 1 கிலோ வாட் சோலார் பிளாண்ட் அமைக்கத் தோராயமாக ரூ. 83,700 வரை செலவாகும். ‘பிரதம மந்திரி சூர்யா கர்’ திட்டத்தின் கீழ் அரசு வழங்கும் ரூ. 30,000 மானியம் கழிந்தது போக, நுகர்வோர் கையில் இருந்து ரூ. 53,700 மட்டுமே செலவாகும்.

ஒரே தவணையில் பணம் செலுத்த முடியாதவர்களுக்காக எஸ்பிஐ (SBI), பேங்க் ஆஃப் பரோடா போன்ற பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் 3 முதல் 7 ஆண்டுகள் வரையிலான எளிய தவணையில் (EMI) சோலார் கடன் வழங்கி வருகின்றன.

மாதம் எவ்வளவு மிச்சமாகும்? திரும்பக் கிடைக்கும் லாபம்

விஜயவாடாவைச் சேர்ந்த ‘ஐஜிஐ சோலார்’ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆதித்யா பிரபாகரின் கூற்றுப்படி, சோலார் பேனல்களின் உற்பத்தி வானிலை மற்றும் சூரிய ஒளியைப் பொறுத்து மாறுபடும். 1 கிலோ வாட் அமைப்பிலிருந்து தினமும் சராசரியாக 4 முதல் 5 யூனிட் மின்சாரம் கிடைக்கும். இது மாதத்திற்கு 120 முதல் 150 யூனிட்கள் வரை உற்பத்தி செய்யும்.

இதன் மூலம் மாதம் தோறும் மின்சாரக் கட்டணத்தில் சுமார் ரூ. 1,200 வரை மிச்சப்படுத்தலாம். அரசு மானியத்துடன் அமைத்தால், நீங்கள் போட்ட ரூ. 53,700 முதலீட்டை 4 முதல் 6 ஆண்டுகளில் சேமித்த கரண்ட் பில் மூலமே எடுத்துவிடலாம். அதன்பிறகு அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளுக்கு முற்றிலும் இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தலாம்.

ஆயுட்காலம் மற்றும் பராமரிப்பு

சோலார் சிஸ்டத்தைப் பராமரிப்பது மிக எளிது. சோலார் பேனல்கள் 20 முதல் 25 ஆண்டுகள் வரை உழைக்கக்கூடியவை. இன்வெர்ட்டர் (Inverter) 8 முதல் 12 ஆண்டுகள் வரை உழைக்கும். பேனல்களில் தூசி படிவதைத் தடுக்க 10-15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீரில் துடைத்துச் சுத்தம் செய்தால் போதும். வயரிங்கை ஆண்டுக்கு ஒருமுறையும், இன்வெர்ட்டரை 3 – 5 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் பரிசோதிப்பது நல்லது. குறைந்த மின்சாரப் பயன்பாடு கொண்ட சிறிய வீடுகளுக்கு 1 கிலோ வாட் சோலார் அமைப்பு ஒரு மிகச் சிறந்த, நீண்டகால லாபம் தரும் முதலீடாகும்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top