Times of Puducherry

62-ஆம் ஆண்டு அடியெடுத்து வைக்கும் தருமபுரி மாவட்டம் அனைத்து கட்டமைப்புகளிலும் உயர்த்த உறுதியேற்போம் - சௌமியா அன்புமணி

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
2 Oct 2026 • 5:33 PM
62nd-anniversary-darmapuri district

பாமக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி வாழ்த்து:

சேலம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு 1965-ஆம் ஆண்டு இதே நாளில் புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்ட தருமபுரி மாவட்டம், இன்று 62-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நாளில் தருமபுரி மாவட்ட மக்கள், அதிகாரிகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தருமபுரி மாவட்டத்திற்கு ஏராளமான சிறப்புகள் உள்ளன. ஆனால், வேளாண்மை, தொழில் வளம் உள்ளிட்ட துறைகளில் கடந்த 61 ஆண்டுகளில் தருமபுரி மாவட்டம் பெற்றதை விட இழந்தது தான் அதிகம். ஒரு காலத்தில் தொழில் வளர்ச்சி நிறைந்த மாவட்டமாக இருந்த தருமபுரி மாவட்டம், 2004-ஆம் ஆண்டில் ஓசூர் உள்ளிட்ட தொழில் வளர்ச்சி நிறைந்த பகுதிகள் கிருஷ்ணகிரி மாவட்டமாக பிரிக்கப்பட்ட பிறகு அந்த சிறப்பை இழந்தது. அதனால், தருமபுரி மாவட்ட இளைஞர்களுக்கு இப்போது போதிய வேலைகள் இல்லை.

தமிழ்நாட்டில் முதன்முதலில் தருமபுரியில் தான் கரும்பு பயிரிடப்பட்டது. அந்த அளவுக்கு இங்கு நீர்வளம் இருந்தது. ஆனால், இப்போது பாசன ஆதாரங்கள் இல்லாமல் விவசாயம் முடங்கிக் கிடக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டை வட மாநிலங்களுடன் இணைக்கும் பாதையாக தருமபுரி திகழ்ந்தது. ஆனால், இப்போது தருமபுரியை தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையுடன் இணைக்க ரயில் பாதை இல்லை. 90 ஆண்டுகளுக்கு முன் 1937-ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி சென்னை மாகாணத்தில் முதன் முதலில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட 4 மாவட்டங்களில் இன்றைய தருமபுரி மாவட்டத்தை உள்ளடக்கிய சேலம் மாவட்டமும் ஒன்று. அப்போது மதுவிலக்கின் அடையாளமாக இருந்த தருமபுரி மாவட்டம் இப்போது அதிக மது வணிகம் நடைபெறும் மாவட்டமாக மாறியிருக்கிறது.

வள்ளல் அதியமான் ஆட்சி செய்த இந்த தகடூர் எனப்படும் தருமபுரி மாவட்டம் இழந்த பெருமைகளை எல்லாம் மீண்டும் பெற வேண்டும் என்பதற்காகத் தான் தருமபுரி – காவிரி உபரி நீர் திட்டம், தருமபுரி சிப்காட் வளாகம், தருமபுரி – மொரப்பூர் ரயில் பாதை திட்டம், மதுவிலக்கு ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். இந்த இலக்குகளில் நாம் விரைவில் வெற்றி பெறுவோம். அதற்காக உழைக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top