Times of Puducherry

இன்ஸ்டா பதிவால் பகை… வடமாடு மஞ்சுவிரட்டுக்கு வந்த பிரபல ரவுடி வெட்டிக்கொலை!

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
19 Oct 2026 • 9:18 PM
instagram-post-revenge-murder-sivagangai

கரும்புத் தோட்டத்தில் விரட்டிச் சென்று கொடூரத் தாக்குதல் – மதுரையைச் சேர்ந்த 3 பேரைப் பிடித்து போலீசார் விசாரணை

சிவகங்கை: சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு மாட்டுடன் வந்த சிவகங்கையைச் சேர்ந்த பிரபல ரவுடி சுள்ளான் மதன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மதுரையைச் சேர்ந்த மூன்று பேரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் அருகே மேலமங்கலத்தில் நேற்று வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக சிவகங்கை புதுப்பட்டியைச் சேர்ந்த சுள்ளான் மதன், தனது மாட்டுடன் நண்பர்கள் நான்கு பேருடன் வந்துள்ளார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்ததாகக் கூறப்படும் 9 பேர் கொண்ட கும்பல், பயங்கர ஆயுதங்களுடன் தாக்க முயன்றுள்ளது. இதனால் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடிய நிலையில், கரும்புத் தோட்டத்துக்குள் புகுந்த மதனை அந்தக் கும்பல் விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிவகங்கை நகர் காவல் நிலைய போலீசார், மதனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தடயங்களைச் சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சுள்ளான் மதன் மீது 14 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும், கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி சிறைக்குச் சென்ற அவர், அக்டோபர் 7-ஆம் தேதி ஜாமினில் வெளியே வந்ததும் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மதுரையைச் சேர்ந்த குழுவுடன் தொடர்புடைய மிதுன் மாணிக்கத்தின் தாயைக் குறித்து அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாகவும், சிவகங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக சிலரை எச்சரிக்கும் வகையில் பதிவிட்டதாகவும் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பதிவுகள் தொடர்பாக ஏற்பட்ட விரோதத்தின் பின்னணியில் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சிறையில் இருந்த மிதுன் மாணிக்கத்துக்கு இந்த விவகாரம் தெரியவந்ததாகவும், கடந்த 16-ஆம் தேதி அவர் வெளியே வந்த பின்னர் தனது நண்பர்களின் உதவியுடன் கொலைக்குத் திட்டமிட்டதாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, மதுரையைச் சேர்ந்த பிரதீப், பாலமுருகன், பிரபு ஆகிய மூன்று பேரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையில் தொடர்புடைய மற்றவர்களை அடையாளம் காணும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு முடிந்த பின்னர் சுள்ளான் மதனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன், அவரது உடல் சொந்த ஊரான புதுப்பட்டிக்கு அடக்கம் செய்வதற்காகக் கொண்டு செல்லப்பட்டது.

வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு வந்தவர் பட்டப்பகலில் விரட்டிச் சென்று வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகங்கை பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளப் பதிவுதான் கொலைக்கான காரணமா என்பது உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top