Times of Puducherry

எஸ்.ஐ.ஆர் விவகாரம் : திமுகவையே குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டும் - வைகோ

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
19 Oct 2026 • 6:20 PM
in-sir-dmk-must-put-in-criminal-dock-vaiko

எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் ஆரம்பத்தில் திமுக மௌனம் காத்துவிட்டு, தற்போது எதிர்ப்பது முரணானது. இந்த ஜனநாயக படுகொலைக்கு திமுகவையே குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டும் என திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இது குறித்து விபரம் வருமாறு:

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் சினிஸ்டர் இன்டிமிடேட்டிங் ரிகரசன் (Sinister Intimidating Regression) ஆகும். இது மிகக் கொடூரமான அச்சுறுத்துகின்ற பின்னடைவு. நாடு முழுவதும் 13.30 கோடி வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தரப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் 2.09 கோடி, மகாராஷ்டிரத்தில் 1.70 கோடி, மேற்குவங்கத்தில் 93 லட்சம், தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் மற்ற இரண்டு ஆணையர்கள் 14 முறை ஆட்சேபனை தெரிவித்தும், அவற்றை நிராகரித்துவிட்டு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் எதேச்சதிகாரமாக செயல்பட்டுள்ளார்.

எஸ்.ஐ.ஆர் விவகாரம் : திமுகவையே குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டும் - வைகோ

தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு திமுகவே முழுப் பொறுப்பு. திமுக நிர்வாகிகள்தான் வாக்குச்சாவடிகளுக்கு சென்று இந்த திருத்தப் பணிகளில் உடனிருந்து பெயர்களை நீக்க உதவினார்கள். ஆரம்பத்தில் திமுக மௌனம் காத்துவிட்டு, தற்போது எதிர்ப்பது முரணானது. இந்த ஜனநாயக படுகொலைக்கு திமுகவே குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.

சென்னையில் வடிகால் திட்டத்திற்கு ரூ.4000 கோடி ஒதுக்கி, அந்தத் திட்டங்கள் உருவாக்கப்பட்டபோது திமுக கூட்டணியில்தான் நாங்கள் இருந்தோம். கூட்டணி தர்மத்தை காப்பதற்காக பொதுவெளியில் கூட்டணி தலைமையை விமர்சித்ததில்லை. ஆனால் உள்ளக கூட்டங்களில் தனது கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வந்தோம்.

முந்தைய ஆட்சிகளில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களில் 25% முதல் 30% வரை கமிஷன் மற்றும் பத்திரப்பதிவு முறைகேடுகள் இருந்த நிலையில், தற்போது அந்த நிலை மாறியுள்ளது. ஊழலை அடியோடு நீக்குவது இமயமலையை நகர்த்துவது போன்ற கடினமான பணி. முந்தைய ஆட்சிகளில் ஊழலில் திளைத்த சில அதிகாரிகள் அரசு ஸ்தம்பிக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு செயல்படுகின்றனர்.

நிர்வாக அனுபவமில்லாத புதிய ஆட்சியாளர்களால் சில இடங்களில் பிழைகள் ஏற்பட்டாலும், அவர்களின் குறிக்கோளும் இலக்கும் சரியாக உள்ளதால், தவெக அரசின் தேர்தல் வாக்குறுதியான ஊழலற்ற அரசை அவர்கள் நிறைவேற்றி வருகிறார்கள். முந்தைய திமுக ஆட்சிக் காலத்திலும் லாக்கப் மரணங்கள் போன்ற சம்பவங்கள் நடந்தபோது ஊடகங்கள் தற்போதைய அளவுக்குக் கேள்வி எழுப்பவில்லை. காவல்துறை உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

ஜனநாயகத்தின் காவலர்களாக விளங்கும் ஊடகங்கள், அரசை தினந்தோறும் புழுதிவாரி தூற்றும் வகையில் கடுமையான குற்றச்சாட்டுகளை வைக்கும்போது சற்று நடுநிலையை கடைப்பிடிக்க வேண்டும். விலைவாசி உயர்வை மாநில அரசால் உடனடியாக தடுத்துவிட முடியாது. அது சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் பணவீக்கத்தால் ஏற்படுகிறது.

திருச்சி கிழக்கு தொகுதி போட்டியிடும் வாய்ப்பு குறித்த கேள்விக்கு, அது முதலமைச்சரும் கூட்டணி கட்சித் தலைவர்களும் பேசி முடிவு செய்ய வேண்டிய விஷயம் என தெரிவித்தார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top