Times of Puducherry

கரூர், கோவை அரசு மருத்துவமனைகளில் மாத்திரை கவரில் இந்தி - டிஆர்பி ராஜா திமுகவின் அப்பட்டமான பித்தலாட்டம்.. மொழி பிழைப்பு சாடிய அமைச்சர் அருண்ராஜ்!

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
7 Oct 2026 • 6:25 PM
hindi-printed-medicine-cover-controversy-b/w-dmk-tvk

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஏழை, எளிய நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மாத்திரைகளின் காகித உறைகளில் (Medicine Paper Covers), வழக்கமாக இடம்பெறும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளுடன் சேர்த்து இந்தி மொழியும் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டிஆர்பி ராஜா, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது மிகக் கடுமையான இந்தித் திணிப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டு மற்றும் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
“பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து தமிழ்நாடு உறுதியாகப் பின்பற்றி வரும் இருமொழிக் கொள்கைக்கு (தமிழ் மற்றும் ஆங்கிலம்) ஆபத்து விளைவிக்கும் வகையில் தற்போதைய தவெக அரசின் நடவடிக்கைகள் அமைந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது; தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா மற்றும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மாத்திரை காகித உறைகளில், காலை, மதியம், இரவு மற்றும் சாப்பிடுவதற்கு முன், பின் போன்ற வழிகாட்டுதல்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு இணையாக இந்தி மொழியிலும் பிரத்யேகமாக அச்சிடப்பட்டுள்ளன.

கரூர், கோவை அரசு மருத்துவமனைகளில் மாத்திரை கவரில் இந்தி - டிஆர்பி ராஜா திமுகவின் அப்பட்டமான பித்தலாட்டம்.. மொழி பிழைப்பு சாடிய அமைச்சர் அருண்ராஜ்!

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் 99% பேர் தமிழ் பேசும் தாய்மொழி மக்கள் மற்றும் உள்ளூர் உழைக்கும் வர்க்கத்தினர் ஆவர்; அப்படியிருக்கையில், மாநில அரசின் நிதி மூலம் கொள்முதல் செய்யப்பட்டு அச்சிடப்படும் மருத்துவமனை மருந்து உறைகளில் யாருடைய அனுமதியுடன் இந்தி மொழி நுழைக்கப்பட்டது? ஒன்றிய பாஜக அரசின் இந்தித் திணிப்புத் திட்டத்திற்குத் தமிழக அரசு கொல்லைப்புற வழியாகத் துணை போகிறதா?

வாயளவில் தமிழ் பற்று, தமிழ்நாட்டு உரிமைகள் எனப் பேசிவிட்டு, அரசு நிர்வாகத்தில் ஒன்றிய அரசின் இந்தி மேலாதிக்கத்திற்குத் தலையசைப்பது தமிழக மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்; உடனடியாக இந்தி அச்சிடப்பட்ட மாத்திரை உறைகளை அரசு மருத்துவமனைகளிலிருந்து உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்; இதற்கு காரணமான அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தின் மீது முதலமைச்சர் விஜய் வெளிப்படையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று டிஆர்பி ராஜா வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் அருண்ராஜ் திமுகவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். தங்கள் ஆட்சியிலேயே இவை புழக்கத்திற்கு வந்தபோது வாய்மூடி, கைகட்டி மௌனியாக இருந்த திமுகவினர், இப்போது திடீரென மொழிப்போர் காவலர்கள் போல் வேடம் போடுவது ஏன்? என மாத்திரை கவரில் இந்தி இடம்பெற்ற விவகாரத்தில் அருண்ராஜ் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எதற்கெடுத்தாலும் மொழியை வைத்து மலிவான அரசியல் பிழைப்பு நடத்தும் திமுகவினர்,
தற்போது கரூர் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாத்திரை உறைகளைக் கையில் எடுத்து, தாங்கள் செய்த வரலாற்றுப் பிழையை மறைத்து இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டி முதலைக்கண்ணீர் வடிப்பதற்கு எங்கள் கடும் கண்டனங்கள்!
உண்மையை அடியோடு மறைத்து, மக்கள் மத்தியில் திட்டமிட்டுப் பொய்க் குழப்பத்தை ஏற்படுத்தத் துடிக்கும் திமுகவினருக்கும், தமிழக மக்களுக்கும் இந்த விவகாரத்தின் அப்பட்டமான உண்மை நிலையைத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகிறது.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை கவர்கள் பொதுவாக மத்திய சிறையில் இருந்து பெறப்பட்டு, அதில் ‘காலை / மதியம் / இரவு’ போன்ற குறிப்புகள் தமிழ் மொழியில் மட்டுமே முத்திரையிடப்பட்டு வழங்கப்படுவது வழக்கம்.

கடந்த டிசம்பர் 2025ல் மத்திய சிறையிலிருந்து வரும் கவர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், ஈரோடு மாவட்ட அச்சக தொழில் கூட்டுறவு சங்கம் மூலம் 4 லட்சம் கவர்கள் அச்சிட கடந்த திமுக ஆட்சியில் டிசம்பர் 31, 2025 அன்று அவசர ஆணை வழங்கப்பட்டு, அந்த கவர்கள் 2026 ஜனவரி மாதத்திலேயே (திமுக ஆட்சிக் காலத்திலேயே) மக்களிடம் புழக்கத்திற்கு வந்துவிட்டன.

அதேபோல் கோவையில் சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அதாவது திமுக ஆட்சியில்தான் அலுவலக நடைமுறையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு, சிந்தாமணி கூட்டுறவு நிறுவனம் மூலம் அச்சிடப்பட்டு நடைமுறைக்கே கொண்டு வரப்பட்டது! தங்கள் ஆட்சியிலேயே இந்தியை அனுமதித்து, அதற்கான டெம்பிளேட் உருவாக்கி, நோயாளிகளிடமும் புழக்கத்திற்கு விட்டுவிட்டு, இப்போது ஆளுங்கட்சி மீது பழிபோடுவது எந்த வகையிலான அரசியல்?

தங்கள் ஆட்சியிலேயே இவை புழக்கத்திற்கு வந்தபோது வாய்மூடி, கைகட்டி மௌனியாக இருந்த திமுகவினர், இப்போது திடீரென மொழிப்போர் காவலர்கள் போல் வேடம் போடுவது ஏன்? தாங்களே இந்தியைத் திணித்துவிட்டு, இப்போது அதனை ஒரு பூதாகரமான பிரச்சனையாக மாற்றி அரசியல் குளிர்காய நினைப்பது திமுகவின் அப்பட்டமான பித்தலாட்டம்!

தற்போதைய நிர்வாகம், கிடங்கில் உள்ள தேவையின் அடிப்படையில் மட்டுமே கவர்களைக் கொள்முதல் செய்ததே தவிர, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அந்த வடிவமைப்பிலோ அல்லது மொழியிலோ எந்த மாற்றமும் செய்யவில்லை. தாங்கள் செய்த துரோகத்தை மறைக்க, எங்கள் மீது அபாண்டமாகப் பழிபோடும் திமுகவின் கேவலமான அரசியல் தந்திரம் இது!

இந்த விவகாரம் அரசின் கவனத்திற்கு வந்தவுடனேயே, கரூர் மற்றும் கோவை ஆகிய இரு இடங்களிலும் அந்த மாத்திரை உறைகளின் பயன்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. கரூரில் மீண்டும் பழைய நடைமுறைப்படி, மத்திய சிறையிலிருந்து கவர்கள் பெறப்பட்டு தமிழ் மொழியில் மட்டுமே விவரங்கள் முத்திரையிடப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கும் பணி உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் மேற்கொண்டு நோயாளிகளின் பயன்பாட்டிற்காக ‘தமிழ் மற்றும் ஆங்கிலம்’ ஆகிய இரு மொழிகள் மட்டுமே கொண்ட மாத்திரை கவர்கள் உடனடியாகத் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பேரறிஞர் அண்ணா வழியில் இருமொழிக் கொள்கையை பெயரளவில் இல்லாமல், தன் உயிர் மூச்சாகக் கடைபிடித்து வரும் ஒரே இயக்கம் தமிழக வெற்றிக் கழகம். இதில் எப்போதும் சமரசம் செய்ய மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.

அதிகம் படித்தவை

  • October 7, 2026 • 7:31 PM

5 வயது பெண் குழந்தைக்கே பாதுகாப்பு இல்லையா? – வேல்முருகன் கேள்வி

  • October 7, 2026 • 7:19 PM

மத்திய மீன்வள அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங்கை சந்தித்து மல்லாடி கிருஷ்ணா ராவ் மனு

  • October 7, 2026 • 6:59 PM

உடல் நலக்குறைவால் உயிரிழந்த ஏ எஸ் ஐ பிரபு குடும்பத்திற்கு காவல்துறை சார்பில் நிதி உதவி

  • October 7, 2026 • 6:43 PM

யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம்: மத்திய அரசைக் கண்டித்து திருச்சியில் வணிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

  • October 7, 2026 • 6:25 PM

கரூர், கோவை அரசு மருத்துவமனைகளில் மாத்திரை கவரில் இந்தி – டிஆர்பி ராஜா திமுகவின் அப்பட்டமான பித்தலாட்டம்.. மொழி பிழைப்பு சாடிய அமைச்சர் அருண்ராஜ்!

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top