Times of Puducherry
திருவொற்றியூரில் வடமாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தின் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்த தமிழக வாழ்வுரிக்கை கட்சி முன்வைத்த கோரிக்கைகளை, அரசு இனியும் புறக்கணிக்கப் போகிறதா? தமிழக வாழ் உரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்இச்சம்பவத்தில் பீகாரைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்கொடூரச் சம்பவத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்தச் சூழலில், திருவொற்றியூர் சம்பவம் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான அரசின் செயல்பாடுகளை மீண்டும் தீவிரமாகக் கேள்விக்குள்ளாக்குகிறது.
குற்றம் நடந்த பிறகு கைது செய்வது மட்டுமே சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கான அரசின் கடமையா?குற்றம் நிகழ்வதற்கு முன்பே ஆபத்தை கண்டறிந்து தடுப்பதற்கான கண்காணிப்பு கட்டமைப்பு எங்கே?
தமிழகத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வருவதற்கு எதிரான நிலைப்பாடு எங்களிடம் இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் பணியாற்ற வரும் ஒவ்வொருவரின் அடையாளம், பணியிடம், அவரை அழைத்து வந்தவர், தங்குமிடம், முகவரி உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் அரசின் அதிகாரப்பூர்வ பதிவில் இருக்க வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதற்காகவே உள்நுழைவு சீட்டு “(state inner line permit)” போன்ற கட்டாய இணையவழிப் பதிவு முறையை உருவாக்க வேண்டும் என்று ஏற்கனவே கோரியுள்ளோம்.
தமிழகத்தில் யார் வேலை செய்கிறார்கள்?, எந்த நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள்?, எந்த ஒப்பந்ததாரர் மூலம் வந்தார்கள்?, எந்த முகவரியில் தங்கியிருக்கிறார்கள்? என்பதைக் கூட அரசால் துல்லியமாகக் கண்டறிய முடியாத நிலையில், பாதுகாப்பான நிர்வாகத்தை எப்படி உறுதி செய்ய முடியும்? வெளிமாநிலத் தொழிலாளர்களை அழைத்து வரும் ஒப்பந்ததாரர்கள், அவர்களின் விவரங்களை அரசிடம் பதிவு செய்வதற்கும், அவர்களது தங்குமிடம் மற்றும் பணியிடத் தகவல்களைப் புதுப்பித்து வைத்திருப்பதற்கும் சட்டரீதியாகப் பொறுப்பேற்க வேண்டாமா?
ஒப்பந்ததாரர் அழைத்து வந்த தொழிலாளியின் விவரமே அரசிடம் இல்லையென்றால், அந்தத் தொழிலாளரால் நிகழ்த்தப்படும் குற்றத்தில் அவரை அழைத்து வந்தவரின் பொறுப்பு குறித்து அரசு ஏன் கேள்வி எழுப்பக் கூடாது? இது எந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்களையும் ஒட்டுமொத்தமாகக் குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் கோரிக்கை அல்ல. குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். அதேவேளையில், தொழிலாளர்களை அழைத்து வரும் நிறுவனங்களும் ஒப்பந்ததாரர்களும் தங்களுடைய நிர்வாகப் பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாத வகையில் சட்டம் இருக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.
ஒரு குழந்தை பாதிக்கப்பட்ட பிறகு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அடுத்த குழந்தை பாதிக்கப்படாமல் தடுப்பதற்கான அமைப்பை உருவாக்குவதுதானே அரசின் உண்மையான பொறுப்பு? திருவொற்றியூர் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபருக்கு எதிரான விசாரணையை விரைந்து முடித்து, குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான மருத்துவ, உளவியல் மற்றும் சட்டப் பாதுகாப்பை அரசு முழுமையாக வழங்க வேண்டும்.
மேலும், வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கான கட்டாய இணையவழிப் பதிவு, மாநில அளவிலான அனுமதி நடைமுறை, பணியிடம்–தங்குமிடம் பற்றிய ஒருங்கிணைந்த தரவுத்தளம், ஒப்பந்ததாரர்களுக்கான சட்டப்பூர்வப் பொறுப்பு ஆகியவற்றை தமிழக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.