Times of Puducherry
கடந்த திமுக ஆட்சி காலத்தில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு செய்யப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், தமிழக ஊழல் தடுப்பு பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
2021-2026 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் 28 அரசு ஆற்று மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும், பல மடங்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டு ரூ.4,730 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியிருந்தது. ஐஐடி கான்பூர் நிபுணர்களின் உதவியுடன் ஜியோ ஸ்கேனிங், ட்ரோன்கள் மற்றும் செயற்கைக்கோள் வரைபடங்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் பொக்லைன் இயந்திரங்களின் ஜிபிஎஸ் தரவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. பொக்லைன் இயந்திரங்கள் எந்த இடங்களில், எவ்வளவு நேரம் இயக்கப்பட்டன? அரசு அனுமதித்த எல்லைகள், இயந்திரங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வின் முடிவில் அரசு அனுமதித்த எல்லைகளை தாண்டி முறைகேடாக மணல் அள்ளப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக குற்றவியல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கடந்த ஜூன் 13, 2024 அன்று தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதங்களை அனுப்பியிருந்தது. ஆனால் அப்போதைய திமுக ஆட்சியில் அமலாக்கத்துறை கடிதத்தின் பெயரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஜூலை 18ஆம் தேதி மீண்டும் டிஜிபிக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. அமலாக்கத்துறை அளித்த புகார்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் தமிழக ஊழல் தடுப்பு பிரிவு தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
முதற்கட்டமாக முறைகேட்டில் தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஆற்றுப் படுகைகளில் நேரடியாக ஆய்வு மேற்கொள்வதுடன், தொடர்புடைய அரசியல் பிரமுகரிடமும் விசாரணை நடத்த ஊழல் தடுப்பு பிரிவு திட்டமிட்டுள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.