Times of Puducherry

குத்தகை உரிமையை பாதுகாக்க மதுரை உயர் நீதிமன்றத்தில் விதிவிலக்கு பெற வேண்டும்: அமைச்சரிடம் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
23 Oct 2026 • 7:06 PM
exemption-from-madras-high-court-to-protect-lease-rights-pr pandian

குத்தகை விவசாயிகள் நிலத்திற்கு தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து குத்தகை உரிமையை பாதுகாக்க மதுரை உயர் நீதிமன்றத்தில் விதிவிலக்கு பெற வேண்டும். அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷை நேரில் சந்தித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் வலியுறுத்தினார்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் இன்று சென்னை தலைமை செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷை நேரில் சந்தித்து குத்தகை விவசாயிகள் உரிமையை பாதுகாக்க கொள்கை முடிவெடுக்க வலியுறுத்தினார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:

விவசாயிகள் கோவில் அறக்கட்டளை ஆதீனங்களுக்கு சொந்தமான நிலங்களை குத்தகை சாகுபடி உரிமை பெற்று சாகுபடி செய்து குத்தகை செலுத்தி வருகின்றனர். கடந்த 2013 முதல் 2018 வரை ஏற்பட்ட வறட்சி வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் சாகுபடி செய்ய முடியாமல் குத்தகை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது, அந்த காலங்களுக்கான குத்தகை பாக்கியை நிலுவை காட்டி வருவாய் நீதிமன்றங்கள் மூலமாக தமிழக அரசு நில வெளியேற்றம் செய்து கோவில் அறக்கட்டளை சொத்துக்கள் என்கிற பெயரில் பதிவேற்றியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2022-ல் மதுரை உயர்நீதிமன்றத்தில் கோவில் சொத்துக்கள் அபகரிப்பதை தடுக்க வலியுறுத்தியும் இணைய தளத்தில் வெளிப்படையாக சொத்து விபரங்களை பதிவேற்றம் செய்ய வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதி அரசர் கோவில் சொத்துக்களை இணைய தளத்தில் வெளிப்படையாக பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டார்.

இதனை ஏற்று குத்தகை விவசாயிகள் நிலங்களையும் கோவில் அறக்கட்டளை ஆதீனங்கள் சொத்து என்கிற பெயரில் பதிவேற்றம் செய்ததனர். இதனால் விவசாயிகளை நில அபகரிப்பாளர்கள் என்கிற நிலையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். இது குறித்து திமுக அரசிடம் பலமுறை முறையிட்டும் தீர்வு காண மறுத்துவிட்டனர். மாறாக நிலங்களை ஏலம் விட்டு அதிகார வர்க்கம் அபகரிக்க வழிவகுத்தனர்.

தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து குத்தகை விவசாயிகள் நிலங்களுக்கு விதிவிலக்கு கேட்டு நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரையிலும் குத்தகை விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யவும், கடன் உரங்கள் பெறவும் தடைவிதிப்பதை தடுத்து நிறுத்திட வேண்டும். கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர், ஏற்கனவே கரூர் இனாம் நிலம் குறித்த பிரச்சனையில் 40 நாட்களுக்குள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களுக்கு சொந்தமாக்கப்பட்டது. தங்கள் கோரிக்கையை உடன் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைந்து உரிய கொள்கை முடிவு எடுத்து நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விதிவிலக்கு பெற்று விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

மேலும் காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடியை இழந்த விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட கிராமங்களை அரசிதழில் வெளியிட்டு அதற்கான இழப்பீடுகள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முன் இழப்பீட்டுத் தொகை விவசாயிகள் வங்கி கணக்குகளில் ஈடு செய்ய வேளாண்துறை செயலாளர் தங்களது நேரடி பார்வையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன். விரைவில் விவசாயிகளுக்கு சென்றடைய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் என்றார்.
இந்த சந்திப்பின்போது சென்னை மண்டல செய்தி தொடர்பாளர் சைதை சிவா உடன் இருந்தார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top